ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்ட விஜேதாஸ ராஜபக்ச எம்.பி!

Report Print Murali Murali in பாதுகாப்பு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், வடமாகாணத்திற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கத் தூதுக்குழுவினரை அங்குள்ள காணிகளிற்குள் அனுமதிக்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரிடமிருந்து யாழ். மாவட்ட செயலாளருக்கு உத்தரவுகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில்இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்.

“சீனாவுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியதனாலேயே ஐ.எஸ் தீவிரவாத தாக்குதலுக்கு இலங்கை முகங்கொடுத்தது. இதைப் பற்றி யாரும் கதைக்க முன் வருவதில்லை. கதைப்பதற்கு பயப்படுகின்றனர்.

ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கிய போது, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் சீனாவுக்கு வழங்க வேண்டாம் என எச்சரித்தன. ஏனெனில் ஹம்பாந்தோட்டை அரசியல் ரீதியில், பூகோள ரீதியில் முக்கியமான இடமாகும்.

சீனா ஹம்பாந்தோட்டையில் கால் பதித்ததால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன இங்கு கால் பதிக்க பார்க்கின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்கத் தூதுக்குழுவொன்று விஜயம் செய்தது.

ஊடகவியலாளர்கள் யாருடைய அனுமதியில் விஜயம் செய்தீர்கள் என்று கேட்டபோது பதிலளிக்கவில்லை. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர், தமது தூதுக்குழுவை யாழ்ப்பாணத்திலுள்ள காணிகளிற்குள் அனுமதிக்கும்படி யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபருக்கு உத்தரவிடுகின்றார்.

அன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதா? இல்லையா? என்கிற விவாதம் நடைபெறவிருந்தபோது நாடாளுமன்றத்திற்குள் 225 உறுப்பினர்களுக்கும் சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மடிக் கணினிகள் ஒவ்வொரு உறுப்பினர்களுடைய மேசைகளுக்கும் பொருத்தப்பட்டன.

ஆனால் நான் அதனை எதிர்த்தேன். இவ்வாறு சீன அரசாங்கம் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தையும் விலைக்கு வாங்கி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் பெற்றுக்கொண்டது” என கூறியுள்ளார்.

Latest Offers