இலங்கையில் மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படலாம்! தென்பகுதி மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கையின் தென்பகுதி மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தென் மாகாணத்திற்குள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இருந்து கதிர்காமம் வரையான பகுதிகளிலுள்ள அரச நிறுவனங்களை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த அச்சுறுத்தலையடுத்து ருஹுனு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்துடன், அரசாங்க பாதுகாப்பு பிரிவுகளுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளும் ஆபத்து உள்ளதாகவும், அதற்கமைய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இராணுவ ஊடகப் பேச்சாளர் குறித்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுமக்களின் பாதுகாப்புக்காக சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.