வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழு அட்டகாசம்! இருவர் வைத்தியசாலையில்

Report Print Thileepan Thileepan in பாதுகாப்பு

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் இளைஞர் குழுவொன்று புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் காயமடைந்த இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாக பட்டா ரக வாகனத்தில் நபரொருவர் பழங்கள் விற்பனை செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பழங்களை விற்பனை செய்யும் நபரிடம் சென்று இவ்விடத்தில் வாகனத்தில் வியாபாரம் மேற்கொள்வவதால் தமக்கு வியாபாரம் மேற்கொள்ள இடையூறாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

பல நாட்கள் தெரிவித்தும் பட்டா ரக வாகனத்தில் பழங்கள் வியாபாரம் மேற்கொள்ளும் நபர் வர்த்தக நிலைய உரிமையாளரின் கருத்தினை செவிமடுக்காது அவ்விடத்திலேயே வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இரு தரப்பினருக்கிடையே இன்று காலை கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பட்டா ரக வாகனத்தில் வியாபாரம் மேற்கொண்ட நபர், இளைஞர் குழுவினை வரவழைத்து தம்மீது தாக்குதல் மேற்கொண்டதாக தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்துள்ள குறித்த வர்த்தக நிலைய ஊழியர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் அவ்விடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், பட்டா ரக வாகனத்தினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.