கோத்தபாயவை சிக்க வைக்க தொடுக்கப்பட்ட வழக்கு! மீண்டும் சூடு பிடிக்கும் நிலையில்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்தே அவன்கார்ட் நிறுவனம் சம்பந்தப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பான வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கோத்தபாய ராஜபக்சவுக்கு சட்ட ரீதியான தடைகள் ஏற்பட்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவை நிறுத்துவது தொடர்பாக தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை நடத்தி செல்ல அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு ஆயிரத்து 140 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தவறுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷசங்க சேனாதிபதி உட்பட 13 பேர் பொறுப்புக் கூற வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.