பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சட்டமருத்துவ அறிக்கை!

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

மானிப்பாயில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞனின் மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் இணுவில் வீதியில் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த 23 வயதான செல்வரத்தினம் கவிகஜன் உயிரிழந்தார்.

கொல்லப்பட்ட இளைஞனின் உடல் கூற்று பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் இளைஞனின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெளியிடப்பட்டுள்ள உடற்கூற்றுப் பரிசோதனையின் அறிக்கையில், உயிரிழந்த இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டு இதயத்தைத் தாக்கியுள்ளது என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு ஆறு பேர் மானிப்பாயிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்த சென்ற போது பொலிஸார் சோதனை செய்ய முயன்றனர் என்றும் இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர்.

அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும், கொல்லப்பட்ட இளைஞனுக்கு எந்த குழுவுடனும் தொடர்பில்லையென உறவினர்கள் இன்று பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers