இராணுவ தளபதியாக சர்ச்சைக்குரியவர்! கலக்கத்தை ஏற்படுத்திய மைத்திரி! பின்னணி குறித்து வெளியான தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
2190Shares

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பாடுகள் ராஜபக்ஷ குடும்பத்திற்கு சாதகமான அமையும் வகையில் உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.

இராணுவ தளபதியாக செயற்பட்ட மகேஸ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய இராணுவ தளபதியை தெரிவு செய்வதில் பல நாட்களாக நெருக்கடி நிலை நிலவி வந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் புதிய இராணுவ தளபதி அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் ராஜபக்ஷ குடும்பம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் கோத்தபாயவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட போரின் போது கோத்தபாயவுடன் மிகவும் நெருக்கமான கட்டளைத் தளபதியாக சவேந்திர சில்வா செயற்பட்டிருந்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றி பெறுவார் என தென்னிலங்கை மக்கள் பெரிதும் நம்புவதாக அண்மைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியாக கோத்தபாய தெரிவாகும் பட்சத்தில் அவருக்கு உறுதுணையாக செயற்படும் வகையில் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான விடயமாக கோத்தபாய முன்வைத்துள்ள நிலையில், இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச ரீதியாக பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ள சவேந்திர சில்வாவுக்கு இராணுவ தளபதி நியமனம் வழங்கப்பட்டமைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.