நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் இதுவரை மூலோபாய ரீதியான திட்டமொன்று வகுக்கப்பட்டு செயற்பாடு இடம்பெறுகின்றது என்பதை தான் காணவில்லை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, அரசாங்கத்தினால் இதுவரை இயலாமல்போயுள்ளது. இதுவரை மூலோபாய ரீதியான திட்டமொன்று வகுக்கப்பட்டு செயற்பாடு இடம்பெறுகின்றது என்பதை காண முடியவில்லை.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய ஆயிரம் பேரளவில் 17 முகாம்களில பயிற்சி பெற்றிருந்தனர். 130 பேரளவில் காவல்துறையினரிடம் பெயர்ப்பட்டியல் ஒன்று இருந்தது.
அந்தப் பட்டியிலில் உள்ளவர்களில் இதுவரை 60இற்கும் குறைவானவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, பிரச்சினை முடிவடையவில்லை என்பது சிறுவர்களுக்கும் தெரியும்.
பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு தீர்மானம் மேற்கொள்வதற்கான தகைமை இல்லை என்பதே உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்.