ஐரோப்பிய நாட்டுக்கு செல்ல முயன்ற இளைஞன், யுவதிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த கதி

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
2918Shares

இலங்கை ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயற்சித்த வெளிநாட்டவர்கள் இருவரை இலங்கை அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.

போலி கடவுச்சீட்டு பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்த ஈரான் நாட்டு இளைஞன் மற்றும் யுவதி ஆகியோரை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

28 வயதான ஈரான் நான் பெண் மற்றும் 17 வயதான இளைஞன் நேற்று மாலை 3 மணியளவில் துருக்கி இஸ்தான்புல் நகரத்தில் இருந்து துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இலங்கையில் சுற்றுலா நடவடிக்கை மேற்கொள்ள வந்ததாகவும் தாம் பிரான்ஸ் நாட்டு பிரஜைகள் எனவும், சில நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பதாகவும் விமான நிலையத்தில் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கடவுச்சீட்டை கணினி கட்டமைப்பின் ஊடாக சோதனையிட்ட போது, அந்த கடவுச்சீட்டு சர்வதேச சிவப்பு எச்சரிக்கைக்குள்ளானதென தெரியவந்துள்ளது.

இது குறித்து உடனடியாக கொழும்பில் உள்ள சர்வதேச பொலிஸ் தகவல் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இருவரும் வெளிநாடுகளில் காணாமல் போனவர்கள் என தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டு சொந்தக்காரர்களுக்கும் ஈரான் நாட்டவர்களுக்கும் சமமான உருவங்களை வைத்து போலியான கடவுச்சீட்டுகளை தயாரித்து இவர்கள் பிரான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டில் இருந்த பிரான்ஸ் நாட்டு சொல் என்ன என்பதனை இவர்களிடம் கேட்ட போது இவர்களால் அதனை சரியாக கூறமுடியாமல் போனதுடன் கையடக்க தொலைபேசியில் இருந்த உபகரணத்தை பயன்படுத்தி அந்த சொல்லை கண்டுபிடித்துள்ளனர்.

அவர்களது பையை சோதனையிட்ட போது உண்மையாக ஈரான் கடவுச்சீட்டும் கிடைத்துள்ளது. அதற்கமைய இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.