கடந்த நான்கு மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து, அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ம் திகதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமுல்படுத்தியிருந்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமையவே அவசர கால அமுலாக்கம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதியினால் அமல்படுத்தப்பட்ட அவசர காலச் சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஏப்ரல் மாதம் 24ம் திகதி அனுமதி வழங்கியது. அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 22ம் திகதி அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்து வந்திருந்தார்.
இந்நிலையிலேயே, கடந்த நான்கு மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “ நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்க இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது சரத்திற்கு அமைய, ஜனாதிபதிக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை பயன்படுத்தியே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எட்டியுள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான தேவைக்கு அமைய, இராணுவத்தினர் பொலிஸாருக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
அத்துடன், இராணுவ சோதனை சாவடிகள் தேவையேற்படும் பகுதிகளில் மாத்திரம் அவ்வாறே முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.