ஐ.நா அமைதி காக்கும் படைகளுக்கான வாய்ப்பை இழக்கும் இலங்கை

Report Print Kamel Kamel in பாதுகாப்பு
154Shares

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைகளில் இலங்கைப் படையினரை கடமையில் ஈடுபடுத்தக் கூடிய சந்தர்ப்பங்களை இழங்கும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இலங்கையின் இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையே இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இறுதிப் போரின் போது சவேந்திர சில்வா போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இராணுவத் தளபதியாக சவேந்திர நியமிக்கப்பட்டமையை எதிர்க்கும் வகையில் இதுவரை காலமும் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணிகளுக்கான வாய்ப்பு மறுக்கப்படலாம் என ராஜதந்திர வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

லெபனான், மாலி, தென் சூடான் உள்ளிட்ட நாடுகளில் தற்பொழுது 415இற்கும் மேற்பட்ட இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த படைவீரர்கள் மற்றும் பொலிஸார் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த படைவீரர்களுக்கு விசேட உயரிய சம்பளங்களும் கிடைக்கப் பெறுகின்றது.

சவேந்திராவிற்கு இராணுவத்தளபதி பதவி வழங்கியமைக்கு சில முக்கிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு பதிலடியாக எதிர்வரும் இரண்டு வாரங்களில் இலங்கைக்கான அமைதி காக்கும் சந்தர்ப்பங்களை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படலாம் என அந்த ஊடகம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.