இலங்கைக்கு தப்பிச் சென்றவர்கள் சரணடைந்துவிட்டார்களா? நீதிமன்றம் எழுப்பிய கேள்வி

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

தமிழக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு தப்பிச்சென்றதாக கூறப்படும் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டனரா என்பதை உறுதி செய்து பதில்மனு தாக்கல் செய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் தஞ்சமடைந்த கொழும்பை சேர்ந்த சங்க சிரந்தா மற்றும் முகமது சப்ராஸ் ஆகியோர், போலி ஆதார் அட்டையை தயாரித்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக்கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு அந்த உத்தரவை பின்பற்றவில்லை எனவும் அவர்களின்மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே, இருவர் மீதான வழக்குகள் முடிக்கப்பட்டு, வெளியுறவுத்துறையிடம் ஒப்படைக்காமல், இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் அதனைத்தொடர்ந்து இருவரும் இலங்கைக்கு தப்பிச்சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இலங்கைக்கு தப்பி சென்ற இருவரும் இலங்கை சென்று சரணடைந்து விட்டனரா? கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக காவல்துறை தலைவர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றத்தின் 19ம் திகதி உத்தரவு கடந்த 30ம் திகதி தான் ராமநாதபுரம் எஸ்.பி, டிஜிபி ஆகியோருக்கு அனுப்பப்பட்டதாகவும், எனவே அவர்கள் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் தேவை என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு தாமதமாக டிஜிபிக்கு அனுப்பப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் ராமநாதபுரம் எஸ்.பி அலட்சியமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து வழக்கின் முக்கியத்துவம் கருதி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தப்பிச்சென்ற இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்து விட்டனரா? என்ற உறுதியான தகவலுடன் டிஜிபி பதில்மனு தாக்கல் செய்யவும், ராமநாதபுரம் எஸ்.பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 15ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.