உலக இராணுவங்களை விட இலங்கை இராணுவம் ஒழுக்கமானது! பாராட்டுப் பத்திரம் கொடுத்தார் மகிந்த கத்துருசிங்க

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

இலங்கை இராணுவம் எவரும் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. உலகத்தில் உள்ள இராணுவங்களில் இலங்கை இராணுவத்தினரே ஒழுக்கம் மிக்கவர்கள் என யாழ். மாவட்ட முன்னாள் கட்டளைத்தளபதி மகிந்த கத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பணத்தில் அவர் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நாட்டில் முப்பது வருட காலத்து யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் என்னை யாழ்ப்பாண மாவட்டத்தின் கட்டளைத் தளபதியாக அன்றைய அரசு நியமித்தது.

நான் யாழ்ப்பணத்திற்கு கடமைக்கு சென்ற பின்னர் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராகபக்சவின் ஆதரவுடன் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் வழிகாட்டலில் மக்களுக்கு சேவைகள் செய்ய சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அன்று பலருக்கு உதவி செய்தேன்.

பாடசாலைக்கு கட்டிடம் அமைத்து கொடுத்தேன். போரின் பின்னர் நாம் மக்களுக்கு என்ன தேவை என்று ஆராய்ந்து சேவை செய்தோம். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுத்தோம். அவர்களுக்கான மலசல கூடங்களை அமைத்துக் கொடுத்தோம். நாம் இராணுவம் என்றில்லாது மக்களுடன் மக்களாக இணைந்து சேவை செய்தோம்.

நாட்டை கட்டியெழுப்பும் தலைவனாக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய காணப்படுகின்றார். ஜனாதிபதியாக்க அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும்.

நான் இப்போது இராணுவத்தில் இருந்து ஒய்வு பெற்று இருக்கின்றேன். தேர்தல் ஆணையாளர் இராணுவத்தினர் தேர்தலில் நடுநிலமையாக செயற்பட வேண்டும் என கூறியுள்ளார். நான் இராணுவ சீருடை கழற்றப்பட்டு ஓய்வில் உள்ளேன்.

ஆகவே முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாயவுக்கு என்னால் ஆதரவு கொடுக்க முடியும். ஆனால் சீருடையணிந்து கடமையில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினர் எந்த கட்சிக்கும் சாராது நடுநிலமையாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இலங்கை இராணுவம் எவரும் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை. உலகத்தில் உள்ள இராணுவங்களில் இலங்கை இராணுவத்தினரே ஒழுக்கம் மிக்கவர்கள். போரில் ஈடுபட்ட 13 ஆயிரம் முன்னாள் போராளிகளை மக்களுடன் இணைத்துள்ளோம். இதன் ஊடாக எமது இராணுவத்தின் பண்பு எவ்வளவு என்பதை அறிய முடியும் என்றார்.