இராணுவத்தினர் போர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கோத்தபாய ஒப்புக்கொள்கிறார்?

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

இராணுவப் படையினர் போர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஒப்புக்கொண்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்றைய தினம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் 9ஆம் பக்கத்தில் போர் குற்றச்செயல்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

“ஆயுதங்களுடன் சரணடைந்த 13784 தமிழீழ விடுதலைப்புலி போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், போர் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட இராணுவப் படையினர் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

போர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மற்றும் தண்டனை அனுபவித்து வரும் இராணுவப் படையினரை போன்றே தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் கிரமமான முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சுதந்திரமான பிரஜைகளாக சமூகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் இடம்பெற்ற காலத்தில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட படையினர் என கோத்தபாய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் யாரை குறிப்பிடுகின்றார்? என சிங்கள ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

போர் காலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இராணுவப் படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும் என கூறுவதன் மூலம் கோத்தபாய படையினர் போர் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்பதனை ஒப்புக் கொள்கின்றார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் படையினரை காட்டிக் கொடுத்துவிட்டதாக குற்றம் சுமத்தி வரும் ராஜபக்சவினரே தற்பொழுது படையினர் போர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு வகையில் ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.