இலங்கை மக்களை உருக வைத்த கேர்ணல் ரத்ன பிரிய! வடக்கு, கிழக்கு மக்களுக்காக எடுத்துள்ள தீர்மானம்

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இடமாற்றம் பெற்று சென்று இலங்கையர்கள் மனதை உருக வைத்த, ஓய்வு பெற்ற கேர்ணல் ரத்ன பிரிய பந்துவின் ஆதரவு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி, நாட்டின் அடுத்த ஐந்து வருட காலங்கள் யார் கையில் என்பதை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக சிவில் பாதுகாப்பு படையின் தளபதியாக கடமையாற்றிய ஓய்வு பெற்ற கேர்ணல் ரத்ன பிரிய பந்து குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சில மாதங்களுக்கு முன்பதாக வடக்கு, கிழக்கை சேர்ந்த இளைஞர்கள் என்னை சந்திக்க வந்தார்கள்.

அவர்கள் என்னிடம் கதைக்கும் போது, ஆறு வருடங்களாக எம்முடன் சேவையாற்றிய நீங்கள் எம்மை விட்டு செல்லும் போது உங்களை மீண்டும் எமது பகுதிக்கே தருமாறு கேட்டோம்.

நாங்கள் அவ்வாறு கேட்டது எம்மோடு யுத்தம் புரிந்த தெற்கை வதிவிடமாக கொண்ட ஒரு சிங்கள பௌத்த அதிகாரியை.

எமது அந்த கோரிக்கையை கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் வெறுமனே வாக்குறுதிகளை மட்டும் தருகின்றார்கள்.

ஆனால் எதனையும் நிறைவேற்றி தர மாட்டார்கள். அதனால் அவர்கள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை.

அதனால் நாம் கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டனர்.

அதனால் தான் கட்டாயமாக கோத்தபாயவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.

அதற்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டுமோ அவ்வளவு கஷ்டப்பட்டு பணியாற்றுவோம். விசேடமாக வடக்கு, கிழக்கு மக்களுடன் இணைந்து என தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்ற நிலையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.