கலஹாவில் புதையல் தோண்டியவர்களை சுற்றிவளைத்து கைது செய்ய முற்பட்ட பொலிஸாருக்கு பெருமளவு வெடி பொருட்கள், துப்பாக்கிகள், பௌத்த துறவிகளின் காவி உடை, இராணுவ சீருடைகள் மற்றும் இரத்த கறை படிந்த பூஜை பொருட்கள் என்பன கிடைத்துள்ளன.
குறித்த சம்பவம் லூல்கந்துர தோட்டப் பகுதியில் நேற்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் சந்கேதநபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் அவசர சேவைப் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் லூல்கந்தூர தோட்ட கல்லு மலை பிரதேசத்தில் அரசுக்கு சொந்தமான வன பகுதியின் கல் அடுக்குக்கள் பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் புதையல் தோண்டியதாக கூறப்படும் சந்தேகநபர்களை கலஹா பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போதும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என தெரியவருகிறது.
என்ற போதும் சந்தேகநபர்கள், 13 கிலோகிராம் வெடி மருந்து, இரண்டு கைத்துப்பாக்கிகள், 8 ஜெலட்டின் குச்சிகள், இராணுவ சீருடைகள் இரண்டு, இராணுவ பாதணிகள், பௌத்த துறவிகளின் காவி உடை, மின் பிறப்பாக்கி, கேஸ் சிலிண்டர், கற்களை துளையிடும் உளிகள், அறுக்கும் கருவி, நான்கு அலவாங்குகள், வயர்கள், கேபிள் கம்பிகள், இரத்த கறை படிந்த பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதேவேளை மீட்கப்பட்ட இராணுவ சீருடையில் காணப்பட்ட இலக்கத்தினூடாக சந்தேகநபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.