தப்பியோடிய CID உயர் அதிகாரி நிஷாந்தவை நாடு கடத்த சுவிஸ் அரசாங்கம் மறுப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரியான நிஷாந்த சில்வாவை இலங்கைக்கு நாடு கடத்த முடியாதென சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுவிஸ் சட்டத்திட்டத்திற்கு அமைய அவரையும் அவரது குடும்பத்தினரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்ப மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிஷாந்த சில்வாவுக்கு எதிராக இன்டர்போல் பிடியாணை இல்லாமையினால் அவருக்கு எதிராக செயற்படுவதற்கு சுவிஸ் பொலிஸாருக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று நிஷாந்த சில்வாவை சந்தித்து லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜுடீன், கீத் நோயார், எக்னெலிகொட, உபாலி தென்னகோன் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.

நிஷாந்த சில்வா சமர்பித்த ஆவணங்களுக்கு அமைய சுவிஸ் அதிகாரிகள், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நிஷாந்தவின் அரசியல் பாதுகாப்பு விண்ணப்பம், சூரிச் நகரின் புலம்பெயர்ந்தோர் நிலையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்ற பின்னர், நிஷாந்த சில்வா தனது குடும்பத்துடன் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.