மன்னாரில் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்து புதிய பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை

Report Print Ashik in பாதுகாப்பு

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

நாடளாவிய ரீதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக பொலிஸ் திணைக்களத்தின் அறிவித்தலின்படி பாவனையில் உள்ள முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதுடன் புதிய பதிவு இலக்கம் வழங்கப்பட்டு, அடிப்படை பதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த செயற்திட்டத்தின் முதல்கட்டமாக மன்னார் நகர் பகுதிகளில் தொழில் ரீதியாக பாவனையில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் உள்ள முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட இருப்பதுடன் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களும் திரட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.