பாதுகாப்பு அமைச்சை வசப்படுத்த கோட்டாபய ராஜபக்ச வியூகம்!

Report Print Murali Murali in பாதுகாப்பு

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு ஏதாவது அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசியலமைப்பின் 22வது திருத்தம் என இந்த சட்டமூலம் அரச வரத்தமானி வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தத்தின் கீழ் சாம்பல் நிறப் பகுதியாக மாறியுள்ள ஜனாதிபதிக்கான அமைச்சுகள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

”அரசியலமைப்பின் 43வது பிரிவின், திருத்தமாக கொண்டு வரப்படும் இந்த விதியின் கீழ், ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு எந்த அமைச்சுகளையும் வைத்திருக்க முடியும்.

ஒரு அரசியலமைப்பில் சாம்பல் நிறப் பகுதிகள் மற்றும் தெளிவு இல்லாத விடயங்கள் இருக்க முடியாது. அதனால் தான், 19வது திருத்தம் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதால், இந்த திருத்தத்தை அறிமுகப்படுத்தவுள்ளேன்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

19வது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வரும் வரையில் ஜனாதிபதியிடமே, பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. எனினும், 19வது திருத்தச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்க முடியாது,

இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சராக இன்னமும் எவரையும் நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.