கோட்டாவின் பொதுமன்னிப்புக் காலத்தில் 8005 பேர் மீண்டும் இராணுவத்தில் இணைவு!

Report Print Rakesh in பாதுகாப்பு

சுதந்திரத்தை முன்னிட்டு இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலத்தில் 8 ஆயிரத்து 5 பேர் மீண்டும் சேவையில் இணைந்துகொண்டுள்ளனர் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

தப்பிச் சென்ற இராணுவத்தினரை மீண்டும் சேவையில் இணைந்துக்கொள்ளுமாறும், சட்டவிரோதமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளைக் கையளிக்குமாறும் வலியுறுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கடந்த 3ஆம் திகதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

அதற்கமைய கடந்த 5ஆம் திகதி முதல் நேற்று (12) வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பில் இராணுவப் பேச்சாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

"இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றிருந்த 8 ஆயிரத்து 5 பேர் மீண்டும் சேவையில் இணைந்துகொண்டுள்ளனர். இவர்களுள் 13 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

தரைப்படையைச் சேர்ந்த 7 உயர் அதிகாரிகள் உட்பட 6 ஆயிரத்து 91 பேரும், கடற்படையைச் சேர்ந்த 773 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 6 உயர் அதிகாரிகள் உட்பட ஆயிரத்து 141 பேரும் மீண்டும் சேவையில் இணைந்துகொண்டனர்.

இவர்களுள் பெருந்தொகையானோர் தொடர்ந்து இரணுவத்தில் கடமையாற்றத் தீர்மானித்துள்ளதுடன், குறிப்பிட்ட சிலரே ஓய்வைப் பதிவு செய்ய எதிர்பார்த்திருக்கின்றனர்" - என்றார்.