கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக வெளிநாட்டு தொழிலுக்கு செல்வதனை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொழில் வாய்ப்புக்காக ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெருமளவு இலங்கையர்கள் செல்கின்றனர். இந்நிலையில் குறித்த நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் தொடர்பில் அவசியமான நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் சேவை செய்யும் நாடுகளின் தூதரகங்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையிலும் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய தகவல் பெற்றுக் கொள்வதற்காக அந்த நாடுகளின் தூதரக அலுவலகங்களின் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 1989 என்ற இலக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.