தற்கொலைதாரி சஹ்ரான் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் முக்கியதாரி சஹ்ரான் ஹாசிமும் மற்றும் ஒரு தற்கொலைதாரியும் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சங்ரிலா ஹோட்டலுக்கு சென்று உளவுப்பார்த்தார்கள் என்று சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நேற்று இடம்பெற்றபோது இந்த சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு குண்டுதாரி ஏப்ரல் 17ஆம் திகதியன்று பொய்யான பெயர் ஒன்றின்கீழ் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

குற்றப்புலனாய்வுத்துறையின் சிரேஸ்ட பரிசோதகர் மஹிந்த ஜெயசுந்தர இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

மொஹமட் ஹம்சாம் என்ற பெயரில் இவர் 6 ஆம் மாடியில் உள்ள 616ஆம் இலக்க அறையில் ஏப்ரல் 17ஆம் திகதியன்று தங்கியிருந்துள்ளார்.

மொஹமட் இப்ராஹிம் இன்சாப் அஹ்மட் என்பவரே பொய்யான பெயரில் அங்கு தங்கியிருந்துள்ளார்.

இந்தநிலையில் சஹ்ரான் ஹாசிமும், இப்ராஹிம் இல்ஹாமும் இரண்டு நாட்களுக்கு முன்னர் சங்ரிலாவுக்கு சென்று தாக்குதலுக்கான திட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

தாக்குதலுக்கான தயாரிப்புக்காக இருவரும் அந்த விருந்தகத்தின் உணவகத்தில் காலை உணவை உட்கொண்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் கட்டிடம் ஒன்றின் 5 வது மாடியில் சஹ்ரான் ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தார்,

கட்டடத்தின் பாதுகாப்புக் காவலரிடம் விசாரித்த போது தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் தொடர்பான தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஜெயசுந்தர சாட்சியம் அளித்தார்.

இந்த வேனே கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் அருகில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கபட்ட வேன் என்று அவர் தெரிவித்தார்.

சஹ்ரான் ஹாஷிம் மற்றும் மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் ஆகியோர் தாக்குதலுக்கு முதல் நாள் 20ஆம் திகதியன்று இரவு 7.56 மணிக்கு ஷங்ரிலா விருந்தகத்துக்கு வந்துள்ளார்கள்.

இதன்போது அவர்கள் இருவரும் பெரிய பயணப் பைகளை அவர்களுடன் கொண்டு வந்ததாகவும், பின்னர் அந்த பைகளிலேயே வெடிபொருள் இருந்தமை கண்டறியப்பட்டது என்றும் சாட்சி கூறினார்.

விருந்தக ஊழியர்களில் ஒருவர் பைகளை தங்கள் அறைக்கு எடுத்துச் செல்ல முன்வந்தபோது, இருவரும் சேவையை மறுத்து விட்டதாக ஹோட்டலின் வரவேற்பு அதிகாரி புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு இப்ராஹிம் இல்ஹாம் ஒரு சிறிய பயணப் பையுடன் விருந்தகத்தில் இருந்து வெளியேறி, லவ்னியா மவுண்டில் உள்ள 'ஸ்பான் டவர்' அடுக்குமாடி வளாகத்திற்கு சென்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் அவர் ஏப்ரல் 21 ஆம் திகதி அதிகாலை 1.46 மணிக்கு ஷாங்க்ரி-லா விருந்தகத்துக்கு திரும்புவதற்கு முன்னர், கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு புகழ்பெற்ற

உணவகத்திற்குச் சென்று உணவு வாங்கினார் என்றும் சாட்சி நேற்று தெரிவித்தார்.