பிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Report Print Thirumal Thirumal in பாதுகாப்பு

நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் தொடர்பாக பிழையான தகவல் வழங்கிய பொது சுகாதார அதிகாரி தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சேனக தலகலவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கை அடங்கிய கடிதம் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.தியாகுவால் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார தலைமையிலான ஊடகவியலாளர்களும், நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சேனக தலகல, தொற்று நோய் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சேனக தலகல,

குறித்த சம்பவம் தொடர்பாக முறையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிராந்திய ஊடகவியலாளருக்கு பரிசோதனையின் பின்பு கொரோனா தொடர்பான எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனவும், பரிசோதனையின் மூலம் அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பரிசோதனையின் பின்பு பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையின் பிரதி ஒன்றையும் பிராந்திய ஊடகவியலாளரிடம் தொற்று நோய் பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் மதுர செனவிரத்ண கையளித்தார்.

இந்த விடயம் தொடர்பாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கை தொடர்பாக தாங்கள் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்திற்கு அறியத் தருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.