உயிரை பணயம் வைத்து போராடியவர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய வெளியிட்டுள்ள தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கை கடற்பரப்பில் தீ பற்றிய எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பலை பாதுகாக்க உயிரை பணயம் வைத்து போராடியவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

கிழக்கு இலங்கை கடற்பரப்பில் பயணித்த MT New Diamond என்ற கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்த இலங்கை கடற்படை, விமானப்படை, துறைமுக அதிகாரசபை மற்றும் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு கடல் பல்லுயிரியலைப் பாதுகாப்பதில் உங்கள் பணியை நான் பெரிதும் பாராட்டுகிறேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளா்.

MT New Diamond கப்பலின் பிரதான எஞ்சின் அறையிலுள்ள கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ, நேற்று (04) மாலை 7.00 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தற்போது இலங்கையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் பாதுகாப்பான கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொதிகலன் வெடிப்பு காரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் காயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஏனையோர் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் (03) முற்பகல் 8.00 மணியளவில், சுமார் 270,000 மெற்ரிக் தொன் கச்சா எண்ணெயுடன் குவைத்திலிருந்து இந்தியா நோக்கிப் பயணித்த, MT New Diamond எனும் பாரிய எண்ணெய் தாங்கி கப்பல் , இலங்கைக்கு கிழக்கே உள்ள கடற்பரப்பில் அம்பாறை, சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் பகுதியில் தீப்பிடித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை, இலங்கை வான்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியன, இந்திய கரையோர பாதுகாப்புப் படையுடன் இணைந்து ஒன்றரை நாளாக மேற்கொண்ட தொடர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியைத் தொடர்ந்து, நேற்றிரவு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தற்போது குறித்த கப்பல் இலங்கையை நோக்கி நகராத வகையில் இலங்கையிலிருந்து 40 கடல் மைல் தொலைவில் பேணப்பட்டு தீயை முற்றாக அணைக்கும் பணி தொடரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை கடலுக்குள் எவ்விதமான எண்ணெய் கசிவும் ஏற்படவில்லை என, இந்திய கரையோர பாதுகாப்புப்படை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.