வவுனியாவில் திலீபனின் நினைவு தினத்திற்கு அனுமதி மறுப்பு

Report Print Theesan in பாதுகாப்பு

வவுனியாவில் நாளைய தினம் இடம்பெறவிருந்த தியாகி திலீபனின் நினைவு தினத்திற்கு எவ்விதத்திலும் அனுமதி வழங்க முடியாது என வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாக வவுனியா நகரசபை உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினரும், வவுனியா மாவட்ட தியாகி திலீபனின் நினைவு தின ஏற்பாட்டாளருமான பிரபாகரன் ஜானுஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கும் வவுனியாவில் இருந்து பேரணியாக நல்லூர் நோக்கி செல்லவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அதற்கு வவுனியா பொலிஸார் ஏற்கனவே அனுமதி மறுத்திருந்தனர்.

இந்த நிலையில் நாம் குறித்த நிகழ்வை நடத்த மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோது இன்று தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறித்த நிகழ்வுக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் யாழ் மாவட்டத்தில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவினையும் எமக்கு உதாரணப்படுத்தி சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் பொலிஸார் அனுமதி மறுத்ததன் காரணத்தினால் குறித்த நிகழ்வை நடத்தமுடியாதுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.