அறிவுறுத்தலை கொடுத்து விட்டு கோபமடைந்த மைத்திரி! ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்ற காலம் வரை தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவழைக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சாட்சியம் அளித்துள்ளார்.

குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) முன்னாள் தலைமை ஆய்வாளர் நிஷாந்தா சில்வா இடமாற்றம் தொடர்பான பிரச்சினை காரணமாகவே இந்த அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதைய பாதுகாப்பு தலைமை அதிகாரி, நிஷாந்த சில்வா தன்னிச்சையாக தம்மை கைது செய்ய முயற்சிப்பதாக பாதுகாப்பு பேரவை கூட்டம் ஒன்றின் போது முன்னாள் ஜனாதிபதியிடம் குற்றம் சுமத்தினார்.

இதனையடுத்து நிஷாந்தா சில்வாவை நீர்கொழும்பு பொலிஸிற்கு இடமாற்றுமாறு முன்னாள் ஜனாதிபதி, பூஜித் ஜெயசுந்தரவிடம் கூறினார்.

அதன்படி நிஷாந்த சில்வாவை நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றி, பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் அறிவித்ததாக பெர்னாண்டோ ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் மூன்று நாட்களுக்குப் பிறகு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால தம்மை அழைத்து நிஷாந்தா சில்வாவை நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றியது யார் என்று விசாரித்தார்.

நிஷாந்தா சில்வாவை இடமாற்றுமாறு கடந்த பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் பூஜித் ஜெயசுந்தரவுக்கு நீங்கள் தான் அறிவுறுத்தினீர்கள் என்று முன்னாள் ஜனாதிபதியிடம் கூறிதாக பெர்னாண்டோ தெரிவித்தார்.

எனினும் மிகவும் கோபமடைந்த அவர், தாம் ஒருபோதும் இதுபோன்ற அறிவுறுத்தல்களைக் கொடுக்கவில்லை என்று கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துவிட்டதாக ஹேமசிறி பெர்னாண்டோ கூறினார்.

சில நாட்களுக்குப் பிறகு தாம் முன்னாள் ஜனாதிபதியைச் சந்திக்கச் சென்றபோது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை எதிர்கால பாதுகாப்பு கூட்டத்திற்கு அழைக்க வேண்டாம் என்று தன்னிடம் அவர் கூறியதாக சாட்சி தெரிவித்தார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதி, முன்னாள் தேசிய புலனாய்வுத்தலைவர் (சி.என்.ஐ) சிசிர மெண்டிஸ் மூலம் பெறப்பட்ட வெளிநாட்டு உளவுத்துறை தகவல்கள் குறித்து சட்டமா அதிபரின் துறையின் பிரதிநிதி இதன்போது சாட்சியை விசாரித்தார்.

இந்த தகவலில் சில நிச்சயமற்ற தன்மையை தான் கண்டதாக கூறிய சாட்சி, அடுத்த நாள் அதனை பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் முன்வைக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

இருப்பினும், 2019 ஏப்ரல் 9ஆம் திகதி நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் இந்த கடிதம் தொடர்பில் விவாதிக்கப்படவில்லை என்று ஹேமசிறி தெரிவித்தார்.

அதனை பற்றி அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலாந்தா ஜெயவர்த்தன கூறுவார் என எதிர்பார்த்த போதும் அவர் அதைப் பற்றி விவாதிக்கவில்லை என சாட்சி தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட சட்டமா அதிபரின் பிரதிநிதி, ஏன் அதனை பற்றி நீங்கள் அதைப் பற்றி விவாதித்திருக்க கூடாது என சாட்சியிடம் வினவினார்.

இதற்கு பதில் அளித்த ஹேமசிறி அது நிலந்தாவின் தகவல், அவரே அதைப் பற்றி விவாதித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை 52 நாள் அரசாங்கத்தின் போது பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை 2018 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டங்களுக்கு அழைப்பதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறை காட்டவில்லை.

பிரதமர் ஒருவர் பாதுகாப்பு பேரவையின் உறுப்பினராக இருப்பதால் நவம்பர் 13ஆம் திகதி கூட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ஷவை அழைக்க வேண்டுமா என்று ஜனாதிபதி சிறிசேனாவிடம் தாம் கேட்டதாக சாட்சி கூறினார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, இப்போது அவரை அழைக்க தேவையில்லை. எதிர்காலத்தில் பார்ப்போம் என்று தம்மிடம் கூறியதாக சாட்சியான பெர்னாண்டோ தெரிவித்தார்.