பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ள ஜாலிய சேனாரத்ன

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் காங்கேசன்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸின் முன்னாள் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜாலிய சேனாரத்னவை, செயல் பொலிஸ் அதிபர் சி.டி.விக்ரமரட்ன கொரோனா தேசிய கட்டுப்பாட்டு செயலகத்தின் விசேட சேவைக்காக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரமே அவர் ஒழுகாற்று நடவடிக்கையின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபரால் காங்கேசன்துறையில் உள்ள வடமாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ் அதிபரின் உதவியாளராக நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதர், ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் சாட்சியங்கள் எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டதாக பொலிஸின் முன்னாள் பேச்சாளரான ஜாலிய சேனாரத்ன ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்த கூற்றை மையமாக கொண்டே அவர் பொலிஸின் இடமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.