கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் தொடர்பான தகவல்கள் மறைக்கப்படுகிறதா? இராணுவத்தளபதியின் தகவல்

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பிலான தகவல்களை மூடி மறைப்பதாக வெளியாகும் வதந்திகளில் உண்மையில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்றைய தினம் காலை வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கொவிட்-19 இன்னும் இலங்கையில் சமூகத் தொற்றாக பரவவில்லை. நிபுணத்துவ மருத்துவர்கள் இதனை உறுதிப்படுத்துகின்றனர்.

சமூகத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கொவிட் மரணங்கள் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளிவருவதில்லை எனவும் பரவி வரும் வதந்திகளில் உண்மையில்லை.

இலங்கையில் மிகச் சிறந்த மருத்துவர்கள் கடமையாற்றி வரும் நிலையில் மருத்துவர்கள் எமக்கு வழங்கும் தகவல்களையே நாம் வெளியிட்டு வருகின்றோம்.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு கொவிட் - 19 வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் காணப்படுவதனால், சமூகத் தொற்று ஏற்படவில்லை என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நோய்த் தொற்றினால் ஏற்படக்கூடிய மரணங்கள் தொடர்பான விபரங்கள் மூடி மறைக்கப்படவில்லை.

மரணங்கள் சம்பவிக்கும் போது பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்பட்டு வருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.