தற்போது முடக்கல் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரதேசங்களின் உட்பகுதிகளில் சமூக கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை கைது செய்ய சாதாரண உடைகளில் செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
தனிநபர்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்வது மற்றும் வெளிப்புற விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனையடுத்தே சாதாரண உடைகளில் பொலிஸ் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீறுபவர்களைக் கண்டறிய ட்ரோன் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் இதுவரை மொத்தம் 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை பெரும்பான்மையான பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கின்ற போதிலும், ஒரு சிலர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வருகின்றனர்.
இதற்கிடையில் இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த கடைசி 24 மணிநேரத்திற்குள் சமூக தூரத்தை பராமரிக்கத் தவறியதற்காகவும், முகமூடி அணியத்தவறியதற்காகவும் நாற்பத்தாறு பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முகமூடி அணியத் தவறியதற்காகவும், சமூக தூரத்தை பராமரிக்காததற்காகவும் நாடளாவிய ரீதியில் இதுவரை மொத்தம் 358 பேர் இன்று வரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.