எவ்வளவு நவீனம் வளர்ந்தாலும் உலகம் உழவர் பின்னேதான் சுழல்கிறது! கிளிநொச்சியில் மண்வெட்டி வழங்கும் நிகழ்வில் தமிழரசுக்கட்சி செயலாளர் பசுபதிப்பிள்ளை உரை

கனடா மறுவாழ்வு அமைப்பு தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயப் பெருமக்களுக்கு அண்மையில் விவசாய உபகரணங்களை பா.உறுப்பினர் சிறீதரனின் ஏற்பாட்டில் வழங்கி உதவிவருகின்றது.

கடந்த உழவர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் த.தே.கூட்டமைப்பு மாவட்ட பணிமனையான அறிவகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கனடா மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி கிராமங்களான விநாயகபுரம் கிருஸ்ணபுரம் பொன்னகர் பாரதிபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும் மற்றும் மாயவனூரை சேர்ந்த விவசாயிகளும் சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய ஐம்பத்தினான்கு மண்வெட்டிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகளின் பா.உறுப்பினருடன் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் பசுபதிப்பிள்ளை கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர்களான பாலாசிங்க சேதுபதி சி.சுப்பையா வே.செல்லத்துரை மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் போன்றோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய தமிழரசுக்கட்சி மாவட்ட செயலாளர் பசுபதிப்பிள்ளை கருத்துரைக்கையில்,

எத்தனை பெரிய இழப்புக்கள் வந்தாலும் தமிழர்களாகிய நாம் எமது நீடிய பண்பான பொங்கல் தினத்தை கடைப்பிடிப்பது எமது தனிப்பெரும் சிறப்பு. எத்தனைதான் நவீனங்கள் பெருகினாலும் என்றும் இந்த உலகம் உழவர்கள் பின்னேதான் சுற்றிக்கொண்டிருக்கின்றது.

விவசாயிகளின் உழைப்பாலும் வியர்வையாலும் இச்சமுகம் சுறுசுறுப்படைகின்றது. அவர்களின் ஆனந்தம்தான் இச்சமூகத்தின் புன்னகையாக மலர்கிறது. இந்த மண்ணின் அற்புதமான சொத்துக்கள்தான் இந்த விவசாயப்பெருமக்கள்.

ஆனால் அந்த அற்புதமான வளங்களில் ஆக்கிரமிப்பு போர்தந்த காயங்கள் இழப்புக்கள் ஆறாதவை .ஆயினும் மீண்டும் துளிக்கும் அந்த மனோவுறுதி இன்று எம் வயல்நிலங்களை பசுமையாக்கி வருகின்றது.

அத்தகையவர்களுக்கு தோள்கொடுப்பது ஒரு இனத்துக்கே தோள் கொடுப்பது போன்றது என்றார்.

Latest Offers