மீள்குடியேற்றாவிட்டாலும் சொந்த இடங்களில் தொழில்புரிய அனுமதிக்க வேண்டும்: வலிகாமம் கடற்றொழிலாளர்

அரசு மீள் குடியமர்விற்கு எம்மை உடன் அனுமதிக்காவிட்டாலும் எமது சொந்த இடங்களுக்கு சென்று தொழில் புரிவதற்காவது அனுமதிக்க வேண்டும் என மயிலிட்டி இடம்பெயர்ந்தோர் மீனவ சங்க தலைவரும் வலிகாமம் வடக்கு கடற்றொழிலாளர் சமாச பிரமுகருமான வி.யோகராசா தெரிவித்துள்ளார்.

வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு வழங்ககப்பட்டு வந்த நிவாரணம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தொழிலும் இன்றி நிவாரணமும் இன்றி தமது பகுதி கடற்றொழிலாளர்கள், வாழ்வாதார உதவிகள் இன்றி இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நூற்றுக்கணக்கான மயிலிட்டி மீனவ குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில், கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித்துறை முதல் கற்கோவளம் வரையான வடமராட்சி கரையோரக் கிராமங்களில் வசித்து வருகின்றன.

இந்நிலையில் இடம்பெயர்ந்த இந்த கடற்றொழிலாளர்கள் தாம் தங்கியுள்ள இடங்களில் கடற்றொழில் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீறி தொழில் செய்ய முற்படும் போது  உள்ளுர் மீனவர்களுக்கும் இடம்பெயர்ந்த மீனவர்களிற்குமிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

வன்னிக்கு சென்ற மீனவர்கள் சொந்த இடம் திரும்பியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள் நெரிசலை எதிர் கொண்டுள்ளன. இதனாலேயே மோதல் சூழல் தோன்றியுள்ளது. எனினும் நாங்கள் சுமூகமாக செயற்படவே விரும்புகிறோம்.

அரசு மீள் குடியமர்விற்கு எம்மை உடன் அனுமதிக்காவிட்டாலும் எமது சொந்த இடங்களுக்கு சென்று மீன்பிடிக்கவாவது அனுமதிக்க வேண்டும் எனவும் வலிகாமம் வடக்கு மீனவ சமாச பிரமுகருமான வி.யோகராசா மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Offers