கருவறையில் செந்தமிழ் : சுவிட்சர்லாந்து உலக சைவத் தமிழ் மாநாட்டில் தீர்மானம்

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சைவத் தமிழ் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சைவப் பெரியோர்களும், ஆன்மீக அறிஞர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.

சுவர்ண பூமி என்றழைக்கப்படுகின்ற சுவிட்சர்லாந்தில் பேர்ண் நகரில் 16. 09. 2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அருள்ஞானமிகு ஞானம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் தீர்த்தத்திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சைவத்தமிழ் மாநாடும் அதனைத் தொடர்ந்து மாநாட்டில் செந்தமிழ் வழிபாட்டுப் பிரகடனம் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் சைவ உலகத் தமிழ் அறிஞர்களிடையே செய்யப்பட்டது.

நால்வரும் திருமுறைகளும்

அன்று முதலாவது நிகழ்வாக சமயக்குரவர் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகப்பெருமான் என நால்வரையும் ஞானலிங்கேச்சுரர் ஆலயக்குருமார்கள் முரளி ஐயா, விக்னேஸ் ஐயா, கிரி ஐயா, சுரேஸ் ஐயா ஆகிய நான்கு குருமார்களும் நாயன்மார்களை காவிவர ஞானலிங்கேச்சுரர் அடியவர்களும், உலக சைவப்பேரவைத் தொண்டர்களும் பூமாரி பொழிய சசிஐயா, கிளிஐயா வெள்ளித்தாம்பாளத்தில் அருட்பெரும் செல்வர் நம்பியாண்டார் நம்பி தொகுத்தளித்த செந்தமிழ்த் திருமறைத் திருமுறைகளைத் தாங்கிவர ஆரம்பமானது.

சைவ அறிஞர்களுக்கு வரவேற்பு

நால்வரும் திருமுறைகளும் மேடையில் எழுந்தருள, சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தேவாரம் பாடி மாநாட்டினை ஆரம்பித்து நிகழ்ச்சித் தொகுப்பினை திருநிறை. சாமிக்கண்ணு தினேஸ்குமார் அவர்களிடம் கையளித்தார். மாநாட்டு வரவேற்புரையினை அருட்திரு. யோகன் ஐயா, ஞானலிங்கேஸ்வரர் திருத்தொண்டர் ஆலோசகர் ஆற்றினார். அவர் தனது உரையில் இந்நிகழ்வானது இறைவன் ஏற்பாடாகும் எனும் பொருட்பட ஆற்றி கூடியிருக்கும் திருக்கூட்டத்தையும் சைவத்தமிழ் அறிஞர் பெருமக்களையும் சைவநெறிக்கூடத்தின் பெயராலும் உலக சைவப் பேரவையின் பெயராலும் வரவேற்றார்.

சைவத்தமிழ்த்திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டின் தேவை தொடர்பாக யோகிராம் சுந்தர், யோகாசன ஆசிரியர் (யோகி), இலண்டன், வினாசித்தம்பி தில்லையம்லம், ஆலோசகர் ஞானலிங்கேச்சுரர் ஆலயத் திருத்தொண்டர்சபை, இளங்கோ ஏரம்பமூர்த்தி, தமிழாசிரியர், சித்தவைத்தியர், சைவநெறிக்கூடம் சிவபணிநிலையம், காட்முற் ஹஸ், சர்வமதபீடத்தின் தலைவர், சுவிஸ், சுப்பிரமணியம் உதயபாரதிலிங்கம், சுவிஸ் தமிழ் ஆசிரியர்சங்கத் தலைவர், சசிகலா இராஜமனோகரன், வைத்தியகலாநிதி, இலண்டன், கனகசாபாபதி சக்திதாசன், கவிஞர், டென்மார்க், சின்னத்துரை சிறீறஞ்சன், உச்சி முருகன்கோவில் நிறுவனர், இலண்டன், செல்லத்துரை மனோகரன், உலக சைவப்பேரவை செயலாளர், இலண்டன், செல்லத்துரை தேவராஜா உபதலைவர், ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் தேவஸ்தானம், அட்லிஸ்வில், சுவிஸ், பொன்னம்பலம் முருகவேள், உலகத்தமிழர்பண்பாட்டு இயக்க தலைவர் சுவிஸ், குமரிநாடு இணையம், வள்ளுவன்பாடசாலை நிறுவனர், கந்தையா இராஜமனோகரன், பொறியியலாளர், கவிஞர், இலண்டன், இரா. சசிதரசர்மா, அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம், லுட்சேர்ன், வசந்தாதேவி பிரேமச்சந்திரன், உலக சைவப்பேரவை, இலண்டன், சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் (தொண்டர்), அறங்காவலர் நாகபூசணி அம்மன் ஆலயம், இலண்டன் ஆகியோர் சிறப்புறை ஆற்றினார்கள்.

திருமுறை வழிபாட்டுத் தீர்மானம்

செந்தமிழ்த் திருமறை வாழிபாட்டுத் தீர்மானம் 'சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார்", ஞானலிங்கேச்சுரர் ஆலயக் குருவால் முன்மொழியப்பட்டது. 'உலகெங்கும் உள்ள சைவத் திருக்கோயில்களின் கருவறையில் சென்றது போக இனி செந்தமிழ்த் திருமறை வழிபாடே நடைபெறவேண்டும்" இதற்கு உலகத் தமிழ் அறிஞர்கள் யாவரும் கூடி நின்று உறுதி மேற்கொண்டு ஆவன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இம்மாநாட்டிற்கும் தீர்மானப்பிரகடனத்திற்கும் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு. பெ. சத்தியவேல் முருகனார் தலமைதாங்கியிருந்தார். மாநாட்டு நிறைவுத் தீர்மானத்தினை சைவமாநாட்டின் பெயரால் சைவநெறிக்கூடத்தின் திருநெறிய தமிழ்நாயகம் "சிவருசி" த. சசிக்குமார் அவர்கள் வாசித்தளித்தார்.

மேலும் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் இன்றுமுதல் தீர்மானத்திற்கமைவாக தமிழ்படுத்தப்பட்டு "அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்" என வழங்கப்படும் எனும் அறிவிப்பினையும் தெரிவித்தார்.
வழிமொழிவினை திருநிறை. சின்னராசா இராதாகிருஸ்ணன், சைவத் தமிழ்ச் சங்கம் சுவிஸ், கூடியிருந்த அடியவர்களின் பெயரால் வழிமொழிந்தார். குமரி இணைய நிறுவனர் பொ. முருகவேளும் வழிமொழிவில் இணைந்துகொண்டார் தமிழார்வலர் அனைவரின் பெயராலும். வழிபாட்டு தீர்மானத்தினைப் போற்றி சிறிதரன் திருநாவுக்கரசு, சைவ தமிழ் பண்பாட்டுப்பேரவை, டென்மார்க், வைரமுத்து சண்முகராஜா, ஞானலிங்கேச்சுரர் திருத்தொண்டர் சபை, சிவஈஸ்வரன் சிவனுஜன், உயர்கல்வி மாணவர், ஞானலிங்கேச்சுரர் திருத்தொண்டர் சபை தொண்டர் ஆகியோர் பேசினர்.

அரியபுத்திரன் நிமலன் நன்றி உரையுடன் வாழ்த்து அனுப்பியிருந்த அனைவரையும் நிரலிட்டு வாசித்தளித்தார். நிறைவில் தலைமை உரை ஏற்று நடாத்திய திரு. மு. பெ. சத்தியவேல் முருகனார் பல பேச்சாளர்களும் சுட்டிக்காட்டிய அனைத்து தகவல்களுக்கும் பதில் அளிக்கும் முகமாக உரை ஆற்றியதுடன் பேச்சாளரில் ஒருவர் தாய்மொழியில் வழிபாடு அவசியம் ஆனால் 'தமிழ்" தெய்வத் தமிழ் என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது என தன் கருத்தை முன்வைத்திருந்தார். இதற்கும் பதிலளிக்கும் வகையில் இறைவனிற்கு மொழி மதம் பேதம் கிடையாது ஆனால் இறைவன் கழகம் கண்ட ஒரே மொழி தமிழ். ஆகவே தமிழ் தெய்வத் தமிழாகும். அத்துடன் எப்போதும் தமிழில் வழிபாடு நடைபெற்று வந்திருக்கிறது. இருண்ட வரலாற்றுக்காலத்தில் தான் தமிழ் மருவி வடமொழி வழிபாடு புகுந்தது. ஆகவே இத்தீர்மானமும் தமிழ் வழிபாட்டின் மீள் எழுச்சியும் செம் பொன்னப்பலத்து விருப்பாகும் எனும் பொருள்படும்படி நிறைவுரையினை ஆற்றினார்.

அடியார்களின் ஆனந்த கண்ணீர்

காலை 07.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவுடன் விழா ஆரம்பித்து, நண்பகல் 12.00 மணிக்கு மாநாடு கூடியது இரவு 21.00 மணிக்கு மாநாடு நிறைவுற திருக்கோவில் வழிபாடு இரவு 22.30 மணிக்கு நிறைவடைந்தது. மாநாட்டின் ஆரம்பம் முதல் நிறைவு வரை அடியவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பல அடியர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்ட காட்சி மெய் உறையச் செய்தது. தினேஸ் அவர்களின் நிகழ்ச்சித்தொகுப்பின் திறன் அடிவயர்களை மிகவும் கவர்ந்தது.

Latest Offers