"கிபீர்' விமானங்களின் அட்டகாசத்தால் பீதியில் உறைந்துள்ள முல்லைத்தீவு மக்கள்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று காலை பேரிரைச்சலுடன் வட்டமிட்டு தாழப் பறந்து சென்ற “கிபீர்” குண்டு வீச்சு விமானங்களால் அப்பிரதேச மக்கள் பீதியில் உறைந்து காணப்பட்டனர்.

நேற்று காலை 8 மணியளவில் திடீரெனப் பேரிரைச்சலுடன் முல்லைத்தீவு பிரதேசத்துக்குள் நுழைந்த கிபீர் விமானங்கள் தாழப் பறந்து வட்டமடித்தன.

தாக்குதலுக்கு வட்டமிடுவதைப் போன்று இவ்விமானங்கள் தாழப்பறந்து சென்றதால், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பதற்றத்தில் பாதுகாப்புக்காக மறைவான இடங்களைத் தேடி ஓடினர்.

புதுக்குடியிருப்பு, கேப்பாபிலவு, ஆனந்தபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் முல்லைத்தீவுக் கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை அவை பேரிரைச்சலுடன் சுற்றிவளைத்தன.

போர் முடிவடைந்து 3 ஆண்டுகளின் பின்னர் இந்த மாதம் 10 ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதி தீபாவளித் தினத்தன்றும் கிபீர் விமானங்கள், முல்லைத்தீவில் தாழப் பறந்து மக்களை அச்சுறுத்தின. இது மூன்றாவது தடவையாக மக்களை அச்சுறுத்தியள்ளதாக அப்பிரதேச மக்கள் அச்சம் கலந்த தொனியுடன் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Latest Offers