ஒப்பந்தக்காரர்களைப் பார்த்து பயப்படுகின்றது வீதி அபிவிருத்தி அதிகார சபை

வடக்கில் வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபடும் ஒப்பந்தக்காரர்களுக்கு நாங்கள் அழுத்தங்கள் கொடுத்தால் எங்கள் கதிரைகள் நகர வேண்டிய நிலை ஏற்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பாளர் கூறியுள்ளார்.

யாழ். மாநகர சபையில் நடைபெற்ற வீதி அபிவிருத்தியால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வீதி அபிவிருத்தியின்போது ஒப்பந்தக்காரர்கள் வீதிகளில், மக்களைப் பாதுகாக்கும் அபாய சமிக்ஞை விளக்குகள் வைப்பதில்லை என்று கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒப்பந்தக்காரர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த திட்டப் பணிப்பாளர், நாம் அவ்வாறு அழுத்தங்கள் கொடுத்தால் எங்கள் கதிரைகள் நகரத் தொடங்கிவிடும். இதனால் சில விடயங்களை அனுசரித்து செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீதி அபிவிருத்திப் பணிகள் 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவு பெற்றுவிடும் என்றும் பெரும்பாலான வீதி அகலிப்பு பணிகள் 60 வீதம் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு ஏ9 பிரதான வீதியின் அகலிப்பு பணி அடுத்த வருடம் முற்பகுதியில் நிறைவு பெற்றுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Latest Offers