இலங்கையில் பாலியல் தொழில்: சமூக ஆய்வாளர் ஷர்மிளாவின் கருத்தால் சர்ச்சை

இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் மற்றும் பாதுகாப்பு பெற உதவும் என ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆய்வாளரான செய்யத் ஷர்மிளா வெளியிட்ட கருத்து முஸ்லிம்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விபச்சாரத்தை நாடுவதோ, விபச்சாரம் இடம்பெறுவதை அங்கீகரிப்பதோ இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விடயம் என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகள் அவரது இந்த கருத்து தொடர்பாக கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

இன்று மாலை ஏறாவூர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஷர்மிளா செய்யத் வெளியிட்ட இந்த கருத்துக்கள் குறித்து ஆராய்ந்து, அவரிடம் விளக்கம் கோருவது என தீர்மானித்துள்ளது.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குதல் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்திலிருந்து முடிந்த வரை அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கை மூலம், இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காண்பதே தமது நோக்கம் என்றும் ஏறாவூர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் அப்துல் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாலியல் தொழில் அங்கீகரிப்பட்ட வேண்டும் என்று நான் பிரசாரம் செய்யவில்லை என சமூக ஆய்வாளர் ஷர்மிளா செய்யத் கருத்து வெளியிட்டுள்ளார்.

Latest Offers