மன்னார் மனித புதைகுழி அகழ்வு! இன்றும் ஒரு மண்டையோடு கண்டுபிடிப்பு

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து மேலுமொரு மண்டையோடு இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 14 வது தடவையாக குறித்த மனித புதை குழி இன்று சனிக்கிழமை தோண்டப்பட்ட போதே குறித்த மனித எலும்புக்கூடு உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்றுவரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி உள்ள இடத்திற்கு வருகை தந்த குற்ற புலனாய்வுப்பிரிவினர் இரண்டாவது நாளாக இன்று தமது விசாரணைகளை அங்கு முன்னெடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி குறித்த மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் உத்தரவிற்கமைவாக அன்று முதல் தற்போது வரை குறித்த புதை குழி தோண்டப்பட்டு வருகின்றது.

தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளை பெட்டிகளின் பொதி செய்து பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு அங்கு பெட்டிகளில் பொதி செய்யப்படும் மனித எலும்புக்கூடுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று சனிக்கிழமை பகல் 1 மணிவரை குறித்த பணிகள் இடம்பெற்றது. மீண்டும் புதை குழி தோண்டும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திருக்கேதீஸ்வரத்தில் கடந்த டிசம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட நீர்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Latest Offers