தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் போது உயிரிழந்தவர்களின் 40வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் அமைந்துள்ள நினைவு தூபிக்கு முன்பாக இவ் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான க. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், வேலுப்பிள்ளை சிவயோகன், அரியகுட்டி பரஞ்சோதி, பாலச்சந்திரன் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1974 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதிநாளான ஜனவரி 10 ஆம் திகதி தமிழின் பெருமைகளையும் பண்பாட்டின் பெருமைகளையும் பற்றி அறிஞர்கள் பேசினார்கள்.
குழுமியிருந்த இலட்சகணக்கானோர் உணர்வோடு, கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

இறுதிக தமிழக பேராசிரியர் “நைனா முகமது” உரையாற்றிக் கொண்டிருக்கும் போது யாழ். பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேகரா தலைமையிலான காவற்றுறை மாநாட்டில் கலந்து கொண்ட மக்களைத் தாக்கியதுடன் துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் 9 பொதுமக்கள் உயிரிழந்தார்கள் பலர் காயமடைந்தனர். அரங்குகள் சேதமடைந்தன. இம்மாநாட்டினைக் குழப்பிய யாழ்.உதவி காவற்றுறை அதிதியட்சகர் சந்திரசேகரா பின்னர் ஜனாதிபதி சிறிமாவே பண்டார நாயக்காவினால் பொலிஸ் அத்தியட்சகராக பதவியுயர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சம்பவத்தில், வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15),பரஞ்சோதி சரவனபவன் (வயது 26),வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32),யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52),குலேந்திரன் அருளப்பு (வயது 53),இராசதுரை சிவாநந்தம் (வயது 21),இராஜன் தேவரட்னம் (வயது 26),சின்னத்துரை பொன்னுத்துரை(வயது 56) ,சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

Latest Offers