லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் யாழில் மக்கள் பார்வைக்கு!

இரணைதீவுக் கடலில் 1998 ம் ஆண்டில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்ட, லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்கள் யாழ். சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக இன்று வைக்கப்பட்டுள்ளன.

லயன் எயர் 602 விமானம் பலாலி விமான நிலையத்தில் இருந்து 1998 செப்ரெம்பர் 29ம் திகதி, 48 பயணிகள், உக்ரேன் நாட்டவர்கள் உள்ளிட்ட 7 பணியாளர்களுடன் இரத்மலானை விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டு, 10 நிமிடங்களில் ரேடர் திரையில் இருந்து மறைந்து போனது.

அந்த விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவே நம்பப்பட்டது. இவ்விமானத்தின் பாகங்கள் கடந்த வருடம் மே மாதம் தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலின் கீழ், கடற்படையினரால் மீட்கப்பட்டன.

இரண்டு நாட்கள் நீடித்த இந்த மீட்புப் பணியின் போது, விமானத்தின் பாகங்கள், பெண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, செயற்கைப் பல், மற்றும் மனித எலும்புகள் சிலவும் மீட்கப்பட்டதாக படைத்தரப்பினரால் கூறப்பட்டது.

மீட்கப்பட்ட பொருட்கள் இன்று யாழ்ப்பாணத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை நான்கு மணிவரை இந்த பொருட்களை மக்கள் பார்வையிடலாம்.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணிவரையும் பார்வையிடலாம்.

பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸாநாயக்க தலைமையிலான குழுவினரால் விமானத்தில் பயணம் செய்தவர்களினை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் அவர்களின் உறவினர்களிடம் இடம்பெற்று வருகின்றன.

இன்றைய விசாரணைகளின் போது விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்களிடம் பெறப்படுகின்ற தகவல்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று என்று சட்டவைத்திய அதிகாரி பிரசன்ன தஸாநாயக்க தலைமையிலான குழுவினர் தெரிவித்தனர்.

Latest Offers