திருக்கேதீஸ்வரத்தில் இன்றும் எலும்புக்கூடு ஒன்றும் ஆபரணங்களும் மீட்பு! மண்டையோடுகள் துப்பாக்கியால் துளைக்கப்பட்டுள்ளது!

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி இன்று  வெள்ளிக்கிழமை எட்டாவது தடவையாக தோண்டப்பட்ட போது அதிலிருந்து மேலுமொரு மனித மண்டையோட்டின் சிதைவுகள், உடைந்த காப்பு மற்றும் முத்து மணிகள் அடங்கிய ஆபரணங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மனித புதைகுழி, நீதவான் ஆனந்தி கனகரட்ணம், அநுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல். தனஞ்சய வைத்தியரட்ன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணிவரை மீண்டும் தோண்டப்பட்டது.

இதன்போது ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் துண்டாக்கப்பட்ட மண்டையோட்டின் துண்டுகள், உடைந்த காப்பு, முத்து மணிகள் சிலவும் குறித்த புதை குழியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த புதைகுழியிலிருந்து இன்றுவரையில் 37 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, புதைகுழி தோண்டும் பணி  நாளை சனிக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் 20ம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கேதீஸ்வரம் மாந்தை ஆலயத்திற்கு முன் சுமார் 70 மீற்றர் தொலைவில் உள்ள வீதிக்கு அருகில் நீர் இணைப்பிற்கு பள்ளம் தோண்டிய போது மேற்படி எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்விடயம் தொடர்பில் மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து தற்போது குறித்த பகுதி தோண்டப்பட்டு தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகளவு புதைகுழிகள் கண்டுபிடிப்பு: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அச்சம்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் 37 எலும்புகூடுகள் இருந்தது. இதன் மூலம் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதைக்கபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை காவல்துறை, இது விடுதலைப்புலிகளின் செயலாக இருக்கலாம் என கூறினர்.

இலங்கையில் நடந்த போரின் போது நடைபெற்ற மனித உரிமைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அந்நாட்டு அரசுக்கு பெரும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்களின் எலும்புக்கூடுகள்  இலங்கை அரசுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

ஒன்றின் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள இந்த சடலங்களின் மண்டை ஓடுகள் துப்பாக்கியால் துளைக்கப்பட்டிருப்பது இது கண்டிப்பாக இராணுவத்தின் செயலாகவே இருக்க முடியும் என கருதப்படுகிறது.

1990 ம் ஆண்டு முதல் இப்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் சூழ்நிலையில், இது போரில் ஈடுபட்ட தமிழர்களின் சடலமாகவே   இருக்கக்கூடும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Latest Offers