மன்னார் மனித புதை குழியில் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

மன்னார் மாந்தைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதபுதைகுழ மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை காலை தோண்டப்பட்டது.

இது வரை 11 இற்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக இன்று மீண்டும் தோண்டப்பட்டது.

மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மற்றும் அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்திய ரெட்ண ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 8 மணிமுதல் மாலை 2.15 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டு மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டது.

ஏற்கனவே 11 மனித எழும்புக்கூடுகள் முழுமையாகவும், சில மனித எழும்புக்கூடுகள் துண்டு துண்டுகளாகவும் மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மேலும் 4 மனித எழும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சில தடையப்பொருட்களும் குறித்த புதைகுழியில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது மீட்கப்பட்ட எழும்புக்கூடுகளை அடையாளப்படுத்தி வருகின்றனர். மேலும் பல மனித எழும்புக்கூடுகள் இருக்கலாம் என தெரிய வந்துள்ள நிலையில் அப்பகுதியில் விரிவுபடுத்தி மனித புதை குழிகள் தோண்டப்படவுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட மனித எழும்புக்கூடுகளில் உள்ள மண்டையோடுகள் சிலவற்றின் மேல் பகுதியில் துவாரங்கள் காணப்பட்டன.

குறித்த மனித புதை குழி தோண்டும் பணி நாளை சனிக்கிழமை காலை மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளது.

இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டுள்ள மனித எழும்புக்கூடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் போது சம்பவ இடத்திற்கு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தை அவர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers