லயன் எயார் விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களை அடையாளம் காண நடவடிக்கை!

வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்நாட்டு பயணிகள் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடைகளை காட்சிப்படுத்தி உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டறிவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் 11ம், 12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில்  மீட்கப்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இதன்போது 72 ஆடைகள், அடையாளம் காண்பதற்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இதனால், 1998ம் ஆண்டு செப்டெம்பர் 29ம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் லயன் எயார் விமானத்தில் பயணித்து உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் குறித்த இரு தினங்களில் யாழ். விளையாட்டரங்குக்கு வருகை தந்து உயிரிழந்தவர்கள் தொடர்பில் அடையாளம் காண தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகள் கடந்த மே மாதம் மீட்கப்பட்டன.

வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டன.

விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள், உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகள், தங்கப்பல், ஆடைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளன.

Latest Offers