ஜெனிவாவில் கடுமையான பிரேரணை கொண்டு வர அமெரிக்கா முயற்சிக்கும்! கூட்டமைப்பிடம் நிஷா

போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றல்லாமல் இம்முறை மிகக் கடுமையான பிரேரணை கொண்டு வருவதற்கு அமெரிக்கா இயன்றளவு முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்றுக் கொழும்பில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நேற்று வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அமெரிக்கத் தூதரகத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற சகல பிரச்சினைகளையும் விளக்கமாக அமெரிக்கச் செயலரிடம் தெரிவித்தோம். இராணுவப் பிரசன்னம், சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு, மக்களின் காணிகள் இராணுவ முகாம்களுக்காக சுவீக்கரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை, சிங்கள மயமாக்கல் உள்ளிட்ட இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளதாக சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, மக்களின் மீள்குடியமர்வு, காணாமற்போனோர் தொடர்பிலும் இன்னமும் தீர்க்கப்படாமல் தொடரும் பிரச்சினைகளையும் அவருக்குத் தெளிவாக எடுத்துரைத்தோம்.

போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படாமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினோம் எனவும் தெரிவித்தார்.

போர்க்குற்றம் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் இலங்கை அரசினால் கடந்த இரண்டு வருடங்களில் எந்தவொரு ஆக்கபூர்வமான விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச விசாரணையே ஒரே வழி என்றும் குறிப்பிட்டார்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் அமெரிக்கப் பிரேரணை அமைய வேண்டும் என்று எம்மால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த நிஷா, கடந்த இரண்டு வருடங்களைப் போன்றல்லாமல், இம்முறை மிகக் கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா இயலுமானவரை முயற்சிக்கும் என்று பதிலளித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டார்.

அத்துடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலை மாத்திரம் நடத்தினால் போதாது. அதனைக் கொண்டு நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். வடக்கு மாகாண சபையை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதைச் சுட்டிக்காட்டியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்

நிஷா - தமிழ் கூட்டமைப்பினர் சந்திப்பு! சர்வதேச விசாரணையே அவசியம்! கூட்டமைப்பு வலியுறுத்து

இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சுயாதீனம் மிக்கதும் பாரபட்சமற்றதுமான விசாரணையொன்றை அரசாங்கம் நடத்தப் போவதில்லை. எனவே சர்வதேச விசாரணையே இன்றியமையாததாகும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பின் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் 7 மணி முதல் 8 மணிவரையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இச்சந்திப்பில் அமெரிக்க தூதுவர் மிச்சல் சிசனும் கலந்து கொண்டார். வடக்கு, கிழக்கின் இன்றைய நிலை குறித்தும் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளருக்கு விளக்கிக் கூறியுள்ளனர்.

அரசாங்கமானது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலோ அல்லது குற்றச்சாட்டுக்கள் குறித்தோ உரிய வகையில் விசாரணை நடத்தவில்லை. சுயாதீனம் மிக்கதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை நடத்தும் விடயத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் அரசாங்கம் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளும் என்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது. எனவே சர்வதேச விசாரணையே இன்றியமையாததாகும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

Latest Offers