கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு! சபை அமர்வில் கலந்து கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி

வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அடுத்த வட மாகாண சபை அமர்வில் கந்தசாமி கமலேந்திரன் கலந்து கொள்வதற்கான அனுமதியையும் வழங்கினார்.

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷசின் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பில் வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர் கமலேந்திரனை 2013ம் ஆண்டு டிசெம்பர் 3ம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததுடன், றெக்சியனின் மனைவியும் மற்றுமொரு நபரும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் மீண்டும் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போதே வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனை உட்பட மூன்று பேரையும் எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டார்.
வடமாகாண சபை அமர்வில் கமல் கலந்து கொள்ளலாம்! நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை எதிர்வரும் மாகாணசபை அமர்வில் கலந்த கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொலை தொடர்பில் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பிலான வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்போது எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதான சந்தேகநபர் தனது சட்டத்தரணி ஊடாக மன்றினைக் கோரியிருந்தார்.

அதனையடுத்து குறித்த கோரிக்கையினைப் பரிசீலனை செய்த நீதிமன்றம் எதிர்வரும் மாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கியது.

மேலும் சந்தேகநபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்பதால் அமர்வில் கலந்து கொள்வதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

எனவே அமர்வுக்கு செல்ல அனுமதி வழங்கி கலந்து கொள்வதற்கு வேண்டிய பூரண பாதுகாப்பினை வழங்க சிறைச்சாலை அத்தியட்சகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் சிறைச்சாலையில் இருந்து வடமாகாண சபை கட்டத்திற்குச் சென்றுவிட்டால் ஏனைய உறுப்பினர்களைப் போல நடத்தப்படுவீர்கள்.

எனினும் மன்று அனுமதி வழங்கியுள்ள நிலையில் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளும் போது வழக்கு விடயங்கள் தொடர்பில் சபையிலோ அல்லது உறுப்பினர்களுடனோ விவாதிக்கப்படலாகாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும் சபை அமர்விற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட பின்னர் சாட்சிகளை அச்சறுத்துதல் மற்றும் உத்தரவுகளை மீறிச்செயற்படல் போன்ற விடயங்களில் ஈடுபட்டால் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை வழங்கப்படும்.

எனவே எதிர்வரும் சபை அமர்வில் சந்தேக நபரின் நடவடிக்கைகளை வைத்தே எதிர்வரும் சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படும்.

அத்துடன் சபை நடவடிக்கைக்கு சென்று வந்ததன் பின்னர் சிறைச்சாலையினர் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, மாகாண சபை அமர்வு எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது.அதில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் சந்தேகநபருக்கு எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers