ராஜீவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை 26ம் திகதி வரை நீடித்தது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையை மார்ச் 26ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன்,  7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் மனு அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 26ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏழு பேரின் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த வாரம் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு அவகாசம் கோரியது.

அப்போது, அரசின் பதில், ஆவணங்களை விட குற்றவியல் தண்டனைச் சட்ட அம்சங்களே முக்கியம் என்றும், மரண தண்டனை குறித்து குற்றவியல் சட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்ததோடு, வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Latest Offers