கனடா, ஆஸியில் தமிழீழத் தேசிய துக்க நாள்: குடும்பம் குடும்பமாய் வருகை தந்து உறவுகளை நினைவேந்திய மக்கள்

பொதுமக்கள் நிகழ்வாக தமிழர் அமைப்புக்களின் கூட்டுமுன்னெடுப்பாக கனடாவில் தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் சிறப்புடன் இடம்பெற்றுள்ளது.

சிங்களத்தின் திட்டமிட்ட இனஅழிப்புக்கு தங்கள் உயிர்களை காவு கொடுத்த தாயக உறவுகளை நினைந்து, பெருவாரியானவர்கள் குடும்பம் குடும்பமாய் வருகை தந்து உறவுகளை நினைவேந்தியுள்ளனர்.

தமிழர் தாயகத்தின் மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பு போரில் உயிர்நீத்த தாயக உறவுகளின் ஒளிப்படங்கள், முள்ளிவாய்க்கால் நினைவகத்தில் பொதுமக்களின் வணக்கத்துக்காக வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. 

ஒவ்வொருவரும் தங்களின் வசதிக்கு ஏற்றவகையில் வருகை தந்து, உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் பொருட்டு காலை 11 மணி முதல் நினைவரங்கம் திறக்கப்பட்டிருந்ததோடு, மதியம் 2 மணி முதல் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

கனேடிய அரசியல் பிரமுகர்கள் தமிழ்ச் சமூகப் பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்திருந்த இந்நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர் கலாநிதி தவேந்திராஜா அவர்களும் அமெரிக்காவில் இருந்து வருகை தந்து சிறப்பித்திருந்தார்.

சர்வமத நினைவேந்தல், நினைவேந்தல் உரைகள், நினைவேந்தல் நடனம் என இடம்பெற்றிருந்த நிகழ்வரங்கில், இலங்கைத் தீவில் தமிழினத்தின் மீது இனஅழிப்பு மற்றும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள், இராணுவ தளதிகள் ஆகியோரது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்பெயர்ப் பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

மனிதவுரிமைச் சட்ட நிபுணர் திரு அலி பெய்டூன் அவர்கள் குறித்த பட்டியல் தொடர்பிலான விளக்கவுரையினை வழங்கியிருந்தார்.

அமைச்சர் நிமல் விநாயகமூர்த்தி அவர்கள் குறித்த பட்டியல் அடங்கிய முதற்பிரதியினை வெளியிட, பிரபல தொழில் அதிபர் திரு ரஜீவிகரன் முத்துராமன் அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தேசிய துக்க நாள் உரை ஒளிபரப்பட்டது. 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் கூட்டிணைந்து கனடிய தமிழர் பேரவை, கனடிய தமிழர் இணையம், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆகியன ஒன்றுபட்டு பொதுமக்கள் நிகழ்வாக அமைந்திருந்த இந்நிகழ்வின் ஊடக அறிக்கை:

மே மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு ரொறொன்ரோ சென்ட் பீற்றர் அன் போல் மண்டபத்தில் நிகழ்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு வி. வின். மகாலிங்கம் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அகவணக்கம் செலுத்தப்பட்ட பின் மூத்த அரசியல் வாதியும் இன உணர்வாளரும் செயற்பாட்டாளருமான திரு ஈழவேந்தன் ஈகைச் சுடரை ஏற்றிவைக்க மலரஞ்சலி ஆரம்பமானது.

ஆரம்பத்திலிருந்தே பல நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மிக்க உணர்வோடும் ஆர்வத்தோடும் தமது புனித கடமையாக அஞ்சலி செய்து பிரார்த்தனையை நிறைவேற்றினார்கள்.

பிற்பகல் 2.30 மணிக்கு மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. திரு துஷ்யந்தன் அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். செல்விகள் சந்தனா தேவராஜா, அபிராமி தேவராஜா ஆகியோர் கனடிய தேசிய கீதத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடினார்கள்.

கலாநிதி தவேந்திரராஜா, திருமதி சரோஜினி தங்கவேலு, மருத்துவக் கலாநிதி சாந்தகுமார், திரு நவரத்தினம் கனகேந்திரன் ஆகியோர் ஈகைச் சுடர் ஏற்றி வைக்க அகவணக்கத்தோடு நிகழ்வு ஆரம்பமானது.

தொடர்ந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றன. ரொறொன்ரோ சிவன் ஆலயக் குருக்கள் இந்துசமயப் பிரார்த்தனையை வழங்கினார். கிறிஸ்த்தவ மதப் பிரார்த்தனையை அருட்தந்தை மன்போட் அவர்களும் வணக்கத்திற்குரிய கிறிஸ்ரி குமார் அவர்களும் இஸ்லாமியப் பிரார்த்தனையை மௌலவி ராஜா இப்ராகீம் அவர்களும் வழங்கினார்கள்.

அடுத்து மரியாதை வணக்க நடனம் ஒன்றை கலைமணி திருமதி ஸ்ரீகலா பாரத் அவர்களின் மாணவி செல்வி தேஜஸ்வரி விஜயகுமார் வழங்கினார்.

அதையடுத்து கனடியத் தேசிய அரசியற் பிரமுகர்கள் இலங்கையின் பிற்போக்கான ஜனநாயகமற்ற மோசமான அரசியற் செயற்பாடுகளையும் நல்லிணக்கத்திற்கே வாய்ப்பில்லாமல் தொடருகின்ற அடக்குமுறை ஆட்சியையும் காரசாரமாக் கண்டித்து உரை ஆற்றினார்கள்.

ஸ்ரீலங்காவில் கண்ணியமான ஒரு ஆட்சியை ஏற்படுத்த கனடாவின் காட்டமான செயற்பாடுகள் தொடரும் என்றும் வலியுறுத்தினார்கள்.

மார்க்கம்/யுனியன்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு யோன் மக்கலம், கனடிய லிபரல் கட்சித்தலைவர் மாண்புமிகு ஜஸ்டின் ரூடோ அவர்களின் செய்தியை வழங்கி உரையாற்றினார்.

ஒன்ராறியோ பழமைவாதக் (PC) கட்சி சார்பாக அதன் தலைவர் ரிம் குடாக் அவர்களின் செய்தியை வழங்கி அக்கட்சியின் வேட்பாளர் திரு கென் கிருபா அவர்கள் உரையாற்றியதோடு, அக்கட்சி சார்பாக தானும் திரு சண் தயாபரனும் போட்டியிடுவதையும் நினைவு கூர்ந்தார்.

ஒன்ராறியோ பாராளுமன்ற அமைச்சர் திரு பிரட் டுக்குயிட் அவர்கள் ஒன்ராரியோ முதலமைச்சர் கத்லீன் வின்னின் செய்தியை வழங்கி உரையாற்றினார்.

ஒன்ராறியோ NDP கட்சியின் முதல்வர் திருமதி அன்றியா ஹோவாத் அவர்களின் செய்தியை வழங்கி கட்சித் தலைவர் திரு நீதன் சண் அவர்கள் உரையாற்றினார். NDP கட்சியின் சார்பில் தெரிவான கனடாவின் முதலாவது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் தனது சிறிலங்காப் பயணத்தை நினைவுகூர்ந்து உருக்கமான உரை ஒன்றை வழங்கினார்.

NDP கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கிரெக் ஸ்கொட் அவர்கள் கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மதிப்புக்குரிய தோமஸ் மல்கேயர் அவர்களது செய்தியை வழங்கி உரைநிகழ்த்தினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் காலம்சென்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஜாக் லேற்ரன் அவர்களின் துணைவியுமான ஒலிவியா சௌ அவர்கள், பிரபல ஊடகவியலாளரும் அரசியற் பிரமுகருமான திரு ஜோன் ரோரி ஆகியோரும் அங்கு உரையாற்றினார்கள்.

தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்களின் சிறப்புரை காணொளி மூலம் இடம்பெற்றது.

மற்றும் வைத்தியக் கலாநிதி சாந்தகுமார், திரு வேலுப்பிள்ளை தங்கவேலு, திரு நாதன் வீரவாகு, திரு ஈழவேந்தன் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.

செல்வி சுரபி யோகநாதனின் தாயகப் பாடலொன்றும் நடனதாரகை நிவேதா ராமலிங்கத்தின் தாய்மண் வாசனை தந்த அற்புதமான நடனமும் மக்களை தாயகத்திற்குக் கொண்டு சென்றன.

 

அவுஸ்திரேலியா மெல்பேண் தமிழீழத் தேசிய துக்க நாள் !

அவுஸ்திரேலியாவின் மெல்பேண் பகுதியில் முள்ளிவாய்க்கால் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி, தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. 

நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்கள் ஏற்றிவைத்திருந்ததோடு சிறப்புரையினையும் வழங்கினார். 

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுடைய தேசிய துக்க நாள் உரை ஒளிபரப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு தொடர்பில் மெல்பேண் தமிழ் ஊடக தொடர்பகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு, 

மெல்பேண் ஸ்பிறிங்வேலில் அமைந்துள்ள ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் சரியாக மாலை 5.00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் தொடங்கிய இந்நினைவு நிகழ்வு இரவு 7 மணியளவில் நிறைவடைந்தது.

முதன்மைச் சுடரை அண்ணாவியார் திரு. இளைய பத்மநாதன் அவர்கள் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி வைக்க, முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நேரிலிருந்து எதிர்கொண்ட சிறுவனுட்பட முன்று தலைமுறைகளைச் சேர்ந்த மூவர் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர். 

அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியக் கொடியை அகதிகள் விடயங்களில் போராடி வரும் Balarat ஐச் சேர்ந்த Kath Morton அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. மாணிக்கவாசகர் அவர்களும் ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதன்பின்னர் உயிர்நீத்த மக்களுக்கான மூன்று மதத் தலைவர்களின் மத வழிபாடு இடம்பெற்றது. 

அடுத்த நிகழ்வாக முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகொள்ளும் காணொலி அகலத்திரையில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விக்ரோரிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பிலிருந்து திரு. சிவகுமார் அவர்களால் இந்நிகழ்வு பற்றிய முன்னோட்டமும் இந்நிகழ்வின் தேவையும் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. 

விக்ரோறிய மாநிலத்தில் செயற்பட்டுவரும் அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த முயற்சியாக இந்நிகழ்வு நடைபெறுவதையும் இனிவருங் காலங்களில் இம்முயற்சி தொடரப்படுமென்ற செய்தியையும் இவ்வுரை சுட்டிநின்றது.

அடுத்து இளம் இசைக்கலைஞர் கோகுலன் அவர்களால் மனித அவலங்களின் தாக்கத்தை உணர்த்தும் ஆங்கிலப்பாடல் ஒன்று இசைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தமிழர் இனவழிப்பு நினைவுநாள் தொடர்பாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய இம்மானுவேல் அடிகளாரினதும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்களும் வழங்கிய செய்திகள் காணொலிகளாகக் அகலத் திரையில் காண்பிக்கப்பட்டன. 

தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் புகழ்பெற்ற பாடகரான Les Thomas அவர்களால் தமிழ்மக்களின் இன்னல்களை வெளிப்படுத்தும் பாடலொன்று பாலச்சந்திரன் பிரபாகன் என்ற சிறுவனின் படுகொலையை பாடுபொருளாககொண்டு பாடப்பட்டது. 

தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியைச் சேர்ந்த Colleen Hartland அவர்களின் உரை இடம்பெற்றது.

இந்நாளில் தமிழ் மக்களின் வலியைத் தான் உணர்வதாகவும், தமிழ்மக்கள் எதிர்கொண்ட துன்பங்களுக்கான நியாயம் நிச்சயம் ஒருநாள் கிடைத்தே தீரவேண்டும்; அதுவரை விடாது தொடர்ந்து போராட வேண்டியது அனைவரினதும் கடமை என்ற சாராம்சத்தில் அவ்வுரை அமைந்திருந்தது. 

அதனைத் தொடர்ந்து நாட்டிய நாடகமொன்று மேடையேற்றப்பட்டது. நடனக்கலைஞர்களான நிக்சன் மற்றும் சிறிராம் ஆகியோருடன் எல்லாளன் விளையாட்டுக்கழக கலைஞர்களும் இணைந்து வழங்கிய இந்நாட்டிய நாடகம் பார்வையாளர் அனைவரினதும் உணர்வுகளைத் தொட்டது. 

அதனைத் தொடர்ந்து நிகழ்வின் முதன்மைப் பேச்சாளரான திரு. மாணிக்கவாசகர் அவர்களின் உரை இடம்பெற்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரும், பலதடவைகள் ஜெனீவா சென்று மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் ஈழத் தமிழரின் சார்பில் பரப்புரைகள் செய்து தீவிரமாகச் செயற்பட்டுவரும் மாணிக்கவாசகர் தனது பட்டறிவுகளையும் அவரது உரையில் பகிர்ந்துகொண்டார்.

தற்போதைய உலகச்சூழல், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல், தமிழ்மக்கள் செய்ய வேண்டிய பணிகள் என்பன குறித்து விரிவான உரையாக அவரது உரை அமைந்திருந்தது.

இறுதியாக கொடியிறக்கலுடனும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என அனைவரதும் உறுதியெடுப்புடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் மாலை 7 மணியளவில் நிறைவடைந்தன.

Latest Offers