மாணவர்கள் கடத்தல் வழக்கில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா வாதத்தால் பொலிஸ் அத்தியட்சகருக்கு பிடியாணை

மனுதாரர்கள் சார்பாக ஆட்கொணர்வு மனு விசாரணையில் சாட்சியம் அளிக்க நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்ட முன்னாள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எம்.ஏ ஜயதிலகவிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசாவின் விண்ணப்பத்தையடுத்து பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலப்பிட்டிய பிடியாணை உத்தரவு பிறப்பித்தார்

2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லீம் இளைஞர்களும் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர்.

கடத்தப்பட்ட மூன்று இளைஞர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வேளையில் சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

ஐந்து இளைஞர்களில் மாணவன் ராஜீவ் நாகநாதனின் தாயார் சரோஜா நாகநாதன், கடத்தப்பட்ட பிரதீப் விஸ்வநாதன் சார்பில் அவரது தந்தையார் விஸ்வநாதனும் மாணவனான திலகேஸ்வரன் ராமலிங்கம் சார்பில் அவரது தாயார் காவேரி ராமலிங்கமும் நீதிமன்றில் சாட்சியம் அளித்திருந்த நிலையில் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்பொழுது உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றுபவருமான எம்.ஏ ஜயதிலகா நீதிமன்றில் சமூகம் அளிக்வில்லை.

மனுதாரர்களின் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில் இந்த விசாரணையில் முக்கிய சாட்சியான உதவிப் பொலிஸ் அத்தியட்சர் தொடர்ச்சியாக மனுதாரர்கள் சார்பில் சாட்சியமளிப்பதை தவிர்த்து வருவது மட்டுமின்றி நீதிமன்ற அழைப்பாணையையும் உதாசீனம் செய்துள்ளார். சாட்சி தான் ஏன் நீதிமன்றம் வரமுடியவில்லை என்ற காரணத்தையும் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தவில்லை.

இன்றைய தினம் மட்டுமல்ல ஏற்கனவே மூன்று விசாரணை தினங்கள் நீதிமன்றில் வழக்கு விசாரணை தினத்தில் சமூகமளிக்காததனால் இந்த நீதிமன்றம் பிடிவிராந்து பிறப்பித்திருந்தது. மீண்டும் இன்றுடன் இரண்டு விசாரணை தினங்களாக சாட்சியம் அளிக்க நீதிமன்றிற்கு சமூகமளிக்கவில்லை.

5 மாணவர்களும் கடத்தப்பட்டு ஆறு வருடங்களாகின்றன கடத்தப்பட்ட இளைஞர்களின் இரண்டு பெற்றோர்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டு வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தங்களது பிள்ளைகள் உயிரோடு தங்களுக்கு கிடைப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில் மனுதாரர்களான இளைஞர்ககளின் பெற்றோர் கடந்த மூன்று வருடங்களாக இந்த நீதிமன்றிற்கு நியாயம் கேட்டு வந்து செல்கின்றனர். ஆனால் தொடர்ச்சியாக இந்த சாட்சி நீதிமன்றிற்கு வராமையால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகின்றது.

எனவே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான இந்த சாட்சியை கைது செய்ய பிடியாணை உத்தரவு வழங்கும்படி நீதிமன்றத்தை சட்டத்தரணி வேண்டிக் கொண்டதையடுத்து பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலப்பிட்டிய பிடியாணை உத்தரவு பிறப்பித்து மேலதிக விசாரணையை ஜுலை மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Latest Offers