கமலேந்திரனை பிணையில் எடுக்க எவரும் இல்லை: விளக்கமறியல் நீடிப்பு

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையில் எடுப்பதற்கு  எவரும் வராத காரணத்தால், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கமலேந்திரனை 2 இலட்சம் ரூபாய் காசுப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி அனுமதியளித்தார்.

வழக்கு முடிவடையும் வரையில், யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதியில்லாமல் எக்காரணம் கொண்டும் வெளிநாடு செல்ல முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

அத்துடன், இரண்டாவது சந்தேகநபரான நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியனின் மனைவி அனிட்டாவை, 50 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும், தலா 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணைகளிலும் செல்ல நீதிபதி அனுமதியளித்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பான சாட்சியங்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என அவ்விருவருக்கும் நீதிபதி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, கமலேந்திரனையும் அனிட்டாவையும் எவரும் பிணையெடுப்பதற்கு முன்வரவில்லை.

இதனையடுத்து, எதிர்வரும் 16ஆம் திகதி வரை இருவரையும் தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, மூன்றாவது சந்தேகநபரான இளைஞனுக்கு பிணை மனுக்கோரி விண்ணப்பிக்காத நிலையில் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியன் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி, அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers