பாரத தேசத்தை நம்புங்கள்! சுவாமியின் கருத்து பாஜக வின் கருத்தல்ல! தமிழிசை சௌந்தரராஜன்

பாரத தேசத்தின் மீது நம்பிக்கையை வையுங்கள். இலங்கையில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கவேண்டும். அத்துடன் அவர்களுக்கான உரிமையை பெற்றுத்தரும் வரை பாரதிய ஜனதா கட்சி முழுமையாக பாடுபடும். சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து எங்கள் கருத்தல்ல. இவ்வாறு தமிழக பாஜக தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் வாரவெளியீடு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் வழங்கிய முழுமையான செவ்வி வருமாறு..

கேள்வி: - இலங்கை தமிழர்களின் நலன்களுக்காக பாரதிய ஜனதா கட்சி எம்மாதிரியான நிலைப்பாட்டினை மேற்கொண்டிருக்கிறது?

பதில் - நாங்கள் ஏற்கனவே கூறியதைப் போல் அங்குள்ள தமிழர்கள் ஆட்சி அதிகாரம் முழுமையாக கிடைக்கவேண்டும் என்பதில் நாங்கள் முழு உறுதிப்பாட்டுடன் இருக்கிறோம். மரியாதைக்குரிய தமிழ் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சம்பந்தன் அவர்கள் பாரத பிரதமர் மோடி அவர்களை சந்தித்துவிட்டு, எங்களை காண வந்தபோது எங்களிடம் பகிர்ந்துகொண்டது என்னவெனில், பிரதமர் மோடி, முதலில் ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்தபோது எங்கள் தமிழர்களுக்கான வாழ்வுரிமையை நீங்கள் முழுவதுமாக ஆட்சி அதிகாரத்துடன் தரவேண்டும் என நான் நேரடியாக சொன்னேன் என்பதை எம்மிடம் சொன்னார், இந்நிலையில் நாம் எதை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறமோ அது நடந்துகொண்டிருக்கிறது.

காங்கிரஸும் பி.ஜே.பியும் ஒன்று தான் இரண்டு கட்சிகளுமே ஒன்றுமே செய்யவில்லை என்ற வாய்சவடாலான குற்றச்சாட்டை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் எங்களிடையே சொன்னது, பிரதமர் மோடியுடன் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கி பொறுமையாக இப்பிரச்சினை குறித்து நாங்கள் எடுத்துரைத்ததை கேட்டுக்கொண்டார் என்றார்.

ஆட்சியாள்ர்கள் இவ்விடயத்தை முழுமையாக கிரகித்துக் கொள்வது என்பதே மிக்ப்பெரிய விடயம். இன்றைய திகதியில் காங்கிரஸ்காரர்கள் மீனவர்களின் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நேரடியாக பேசவில்லையே என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

பத்து ஆண்டுகள் ஆட்சி கொண்டிருக்கும் போது அங்கே இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் உச்சகட்ட வேளையில் மாநிலத்தை ஆண்ட தி.மு.கவும் ஒன்றும் செய்யவில்லை. மத்தியில் ஆண்டு  கொண்டிருந்த காங்கிரஸ் அரசும் ஒன்றும் செய்யவில்லை.

இந்நிலையில் பி.ஜே.பி.யைப் பற்றி குற்றம் சாட்டுவது பொருத்தமானதாக இல்லை. இங்கே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போல் அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. அங்குள்ள அதே ஆட்சியாளர்களிடம் தான் நாம் இன்னும் உரிமைகளை கேட்டு கோரிக்கை விடுக்கவேண்டியுள்ளது.

மோடி ஆட்சியில் அமர்ந்த பின் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று திரும்பினர். அதனைத் தொடர்ந்து நாங்கள் அவர்களை சந்தித்து பேசியபோது, எங்களிடம், நாம் அங்கே வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்கான பணிகளை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறோம்.

பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை ஆட்சி அதிகாரத்துடன் கூடிய பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

எம்மைப் பொறுத்தவரை இப்பிரச்சினைக்கு வீதியில் இறங்கி போராடலாம். அனைவரின் கவனத்தையும் கவரலாம். ஆனால் இப்பிரச்சினைக்குரிய உண்மையான தீர்வை பாரதிய ஜனதா கட்சியினால் தான் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

அதிலும் இவ்விடயத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் அனைத்து விடயங்களையும் நாங்கள் தலைமை மத்திய அரசிற்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆக கால அவகாசம் என்ற ஒன்று வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் தான் ஆகியிருக்கின்றன. பத்து ஆண்டுகளுள் முடியாததை, அறுபத்தியேழு ஆண்டுகளில் முடியாததை நூறு நாட்களுக்குள் நீ ஏன் செய்யவில்லை என்று கேட்டால், முதலில் நோக்கத்தைப் பார்க்க வேண்டும்.

அங்குள்ள தமிழர்களுக்கு ஆட்சி அதிகாரத்துடன் கூடிய உரிமைகளை பெற்றுத்தரவேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. இந்த நோக்கத்தை நோக்கி நாங்கள் பயணப்பட தொடங்கிவிட்டோம். ஆனால், ஒரு வெளியுறவுத்துறை கொள்கை, ஒரு ஆட்சி ஒரு கட்சி, இன்னொரு ஆட்சி அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. கால அவகாசத்திற்குள் தான் நாங்கள் இருந்து கொண்டிருக்கிறோம். அங்கு தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கவேண்டும். அத்துடன் அவர்களுக்கான உண்மையை உரிமையை பெற்றுத்தரும் வரை பாரதிய ஜனதா கட்சி முழுமையாக பாடுபடும்.

கேள்வி - அண்மையில் சுப்பிரமணியன் சுவாமி சொன்ன சில கருத்துகள் முரண்பாடாக இருக்கின்றதே...?

பதில் - இது குறித்து நான் மிகத் தெளிவாக சொல்லிவிட்டேன். இந்திய ஊடகங்களுக்கும், எங்களின் கட்சித்தலைமைக்கும் நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம். சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து எங்கள் கருத்தல்ல. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரோ அல்லது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாக குழுவில் இருப்பவர்களோ யாரும் இது போன்று பேசுவதில்லை.

கேள்வி - இப்பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம், ஜனாதிபதி ராஜபக்ச அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?

பதில் - இதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பல கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. பல சந்திப்புகள் நடைபெற்றிருக்கின்றன. ஒரு பிரதமர் ஒரு அதிபரை சந்திப்பது என்பது இறுதியான நிலையாக இருக்கவேண்டும். அதற்கு முன் பல மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும்.

பேச்சுவாத்தை எந்த திசையில், எத்தகைய தீர்வை முன்வைத்து நடைபெறவேண்டும் என்பதை முதலில் இறுதி செய்யவேண்டும். அந்த தீர்வை நோக்கி நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறோம்.

ஏற்கனவே மோடி, ராஜபக் ஷ சந்திப்பின் போது மோடி நேரடியாக எடுத்துக்கூறிய பல விடயங்களுக்கு ராஜபக்ச தரப்பிலிருந்து மறுப்பு வரவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

கேள்வி - சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியா முன்வைத்திருக்கும் பதின்மூன்றாவது சட்டத் திருத்தத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு எப்படியிருக்கும்? அத்துடன் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வருமா?

பதில் - ஒரு ஆட்சியாளரின் வெளியுறவு கொள்கை எப்படியிருக்கும் என்று ஒரு கட்சித் தலைவரால் சொல்ல இயலாது. ஒரு சிறிய சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன். தூத்துக்குடியை சார்ந்த தாதியர்கள் அரபு நாடுகளில் ஒன்றாக ஈராக்கில் கஷ்டப்பட்டுக் கொண்டிருநதார்கள் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தோம்.

பாரதிய ஜனதாக் கட்சியின் வெளியுறவுக்கொள்கை, இந்திய மக்கள் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் சரி,அவர்களை காப்பாற்றக்கூடிய கொள்கையாகத்தானிருக்கும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக எம்மால் சொல்லமுடியயும். அங்கே மரியாதைக்குரிய வகையிலான தீர்வைப் பெற்று தருவதாகத்தான் எங்களின் வெளியுறவுக் கொள்கை அமைந்திருக்கும்.

இதற்கு முந்தைய ஆட்சியில் முழுவீச்சிலான எதிர்ப்பு நிலையில் இருக்கும் போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சில மாற்றங்களை கொண்டு வரும் போது அதற்குரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.

கேள்வி - பிரதமர் மோடி அவர்கள் வட மாகாண முதலமைச்சர் அவர்களை சந்திக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான தங்களுக்கும் இது போன்றதொரு எண்ணமிருக்கிறதா?

பதில் - நிச்சயமாக இருக்கிறது. சம்பந்தன் அவர்கள் இங்கு வருகை தந்தபோது அவரும் இந்த எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் அங்கே நடைபெறும் மற்றும் நடைபெற்று வரும் அவலங்களையும் எடுத்துரைத்திருக்கிறார். அத்துடன் அங்கு பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள். வாருங்கள் அவர்களிடம் பேசி அவர்களின் நிலையைப் பற்றி தெரிந்துகொண்டு செல்லுங்கள் என்றிருக்கிறார்.

எம்மைப் பொறுத்தவரை தற்போது தான் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறேன். பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலை ஆளுங்கட்சிக்கு எதிராக சந்தித்து, தீவிரமாக களப்பணியாற்றினோம். இதனைத் தொடர்ந்து கட்சியின் தேர்தல், உட்கட்சித் தேர்தல் என பல பணிகள் இருக்கின்றன. இருந்தாலும் இலங்கைக்கு வரவேண்டும் என்ற சம்பந்தன் அவர்களின் அழைப்பை தமிழக பாரதிய கட்சி பரிசீலிக்கும்.

கேள்வி - தமிழ் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் - தமிழ் மக்களுக்கு இதற்கு முன் நடந்த சம்பவங்களுக்கு வருத்தத்தையும், இனிமேல் நடக்கவிருக்கும் சம்பவங்களுக்கு ஒரு நம்பிக்கையையும் தமிழ் மக்கள் பெறவேண்டும் என்று மிகவும் அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

நான் கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மருத்துவ மேற்படிப்பினை மேற்கொண்ட போது அங்கு வாழும் இலங்கைத் தமிழர்கள் என் மீது காட்டிய அன்பும், அக்கறையும், அரவணைப்பும் மறக்க இயலாது.

எந்த சமுதாயத்திற்கும் இல்லாத ஒரு சோதனை இந்த தமிழ் சமுதாயத்திற்கு வந்திருக்கிறது. இருப்பினும் நாம் நம்மை இந்த அதிகப்படியான சோதனைகளிலிருந்து விடுவித்து மேம்படுத்திக் கொள்வதில் தான் நம்முடைய எதிர்காலம் இருக்கிறது.

அத்துடன் நாம் ஆட்சி அதிகாரத்துடன் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். எந்த இலங்கையில் நாம் தனித்து விடப்பட்டோமோ அதே இலங்கையில் மீண்டும் அதே உரிமையுடன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.

உங்களது சகோதர தேசமான பாரத தேசத்தின் மீது நீங்கள் முழுமையான நம்பிக்கையை வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Latest Offers