லண்டனில் கோலாகலமாக நடைபெற்ற குப்பிழான் கிராம உதய பொன்விழா

குப்பிழான் கிராம உதய பொன்விழா லண்டன் மாநகரில் மிகவும் சிறப்பாகவும் விமர்சையாகவும் 29-11-2014 சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

 பிரித்தானியாவின் சகல பகுதிகளிலிருந்தும், ஜரோப்பிய நாடுகளிலிருந்தும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 தற்போதைய காலகட்டத்தில் பொது நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் கலந்துகொள்வது மிகவும் அரிதாக உள்ளது. ஆனாலும் இந்த பொன்விழா நிகழ்வுக்கு பெருமளவு மக்கள் கலந்துகொண்டது அவர்களது ஊர் விசுவாசத்தையும் ஒற்றுமையையும் எடுத்து காட்டியது.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு.முத்தையா தர்மபாலன் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அவைத் தலைவர்களாகவும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாகவும் செயல்பட்ட திரு விக்கினராஜா (பீ.பீ.சி தமிழோசை), திரு வரதராஜன் மற்றும் திரு கஜாணனன் அவர்கள் இந்த விழாவிற்காக வெளியிடங்களிலிருந்து பலமாணவர்களை, அறிவுசார் பெருமக்களை, கலை,கலாச்சார ஆர்வலர்களை, வியாபாரமையங்களின் இணைப்புகளை ஏற்படுத்தி விழாவை மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் தூரநோக்குச் சிந்தனைகளோடு நடாத்தியமை பெரும் சிறப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆரம்ப நிகழ்வாக பேச்சுப் போட்டியின் இறுதிச்சுற்று நடாத்தப்பட்டன. மூன்று பேரைக் கொண்ட நடுவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

முதல் பரிசாக தங்கப்பதக்கம் பதிக்கப்பட்ட வெற்றிக்கிண்ணங்கள் (கேடயம்) வழங்கப்பட்டது.தமிழுக்குத்தொண்டுசெய்வோர் சாவதில்லை அவர்கள் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள் என்பதை இப்பேச்சுப்போட்டிகள் எடுத்துக்காட்டின.

அதே வேளை இலங்கை இந்தியா உட்பட வடமொழியிலும் தமிழ்மொழியிலும் சைவசமயத்தின் பெருமையை அதன் வரைமுறை மாறாத பாரம்பரியத்தை வளர்தெடுத்து இன்றளவும் மண்ணின் பெருமைக்குரிய காசிவாசி செந்திநாதையரின் புகழை உலகப்பரப்பிலே மீண்டும் நிலைநிறுத்திய சிறுவர்களுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை தேடித்தந்த குப்பிழான் மண்ணின் புகழ் பேசப்படும் அளவிற்கு உயர்ந்து நின்றது என்றால் உலகத்தமிழருக்கும் அதிலே பங்குண்டு என்றே கருதமுடியும்.

பல ஆண்டுகளாக தமிழ் தாயை மூடிக்கிடந்த இருள் விலகி ஒளிவட்டம் தோன்றியது போன்ற உணர்வை அவருடைய நினைவுப்பேச்சு தாங்கியிருந்தது. சிறுவர்களின் பேச்சாற்றலை கண்டு அனைவரும் பூரித்து போயினர்.

நடுவர்களில் ஒருவர் குறிப்பிடும் போது யாழ்ப்பாணத்தில் இருப்பது போன்று உணர்கிறேன் என்றார். சிறுவயதிலிருந்து ஆங்கில மொழியில் கல்வி பயிலும் சிறுவர்கள் சரியான உச்சரிப்போடு தமிழில் உரையாற்றியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இத்தகைய நிகழ்வுகளிலே நாம் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும். இனம்,மதம்,மொழி,பிரதேசம் என்ற வேற்றுமைகள் இல்லாத புதிய உலகத்தை இங்கே கட்டியெழுப்பவேண்டும். அப்பொழுதுதான், நாம் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நமது குழந்தைகள் தங்களுடைய தாய்மொழியை இன்னும் நேசிப்பார்கள் வாசிக்கின்றார்கள் இல்லை சுவாசிப்பார்கள். அதனால் நமது தாய்மொழி மேலும் மேலும் உறுதியோடு வளரும் என்றே கருத முடிகின்றது.

வளரும் சமுதாயத்தை வளர்த்தெடுக்கப் பாடுபடுகின்ற இவர்களைப் போன்ற மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் உடையவர்களோடு நாம் அனைவரும் நம் கரங்களை இறுகப்பற்றிக் கொள்ளல் வேண்டும்.

பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்ததுவே என்ற தூரநோக்குப் பார்வையிலே �தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற ஏக்கத்தை அவருடைய எதிர்பார்ப்பை நாம் இன்று நனவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்று எண்ணும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நெஞ்சுக்கு ஆறுதல் தருகின்றன.

அதனால் �மெல்லத் தமிழ் இனி மலரும் இந்த மேற்கு உலகங்கள் எல்லாம்� என்று நாம் திசைகளை நோக்கி புறப்படத் தயாராகிவிட்டோம் என்ற உறுதி ஏற்படுகின்றது. இதுபோல நாம் அனைவரும் நம்மை நாமே வளர்த்துக்கொண்டு வருங்கால உலகத்தை தாங்கிக்கொள்வோம்.

 குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றமானது குப்பிழான் மாணவர்களை மட்டுமன்றி மற்றைய தமிழ் மாணவர்களையும் இணைத்து இந்த போட்டியை நடாத்தியிருந்தனர். இதற்கு மேற்கு கிழக்கு லண்டன் பாடசாலைகள் மாணவர்களும் ஆசிரியர்களும் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

எதிர் காலத்தில் சகல பாடசாலை மாணவர்களும் பங்கு பற்றும் போட்டிகளை நடாத்த உத்தேசித்துள்ளனர். இந்த போட்டிகளின் மூலம் இந்த நாட்டில் வாழும் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழி ஆற்றலையும், பேச்சாற்றலையும் வளர்த்தெடுக்க உதவும் என்பதை இந்த விழா வெளிச்சம்போட்டுக்காட்டியுள்ளது.

நிகழ்வுகள் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. திரு தர்மபாலன் அவர்கள் குப்பிழான் கிராம கொடியை ஏற்ற திருமதி தயாழினி மற்றும் செல்வி அஜித்தா கிராமிய கீதத்தை இசைத்தனர். அதனைத் தொடர்ந்து குப்பிழான் கிராம உதய பொன்விழா திரை நீக்கம் செய்யப்பட்டு வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

திரு மோகனதாஸ் அவர்கள் பொன்விழா மலரை வெளியிட திரு.தர்மபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். திரு இரத்தினபாலன் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. செம்மண் சுடர் விருதுகள் பெறும் பெருமக்களின் பெயர்கள் திரு முருகானந்தம் அவர்களால் மேடையில் வைத்து வாசிக்கப்பட்டது.

கௌரவ விருந்தினர்கள் மற்றும் பேச்சுப் போட்டி நடுவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மற்றைய கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. எல்லா நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த இளையோர்களுக்கும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்த பெரியோர்களுக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்களுடன் கருத்தரங்கம் இடம்பெற்றது. இந்த இனிய பொன்னாளில் விக்கினேஸ்வரா மன்றத்தினரின் ஆதரவில் குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.

புலம்பெயர் தமிழ் மாணவர்களின் தமிழ் மொழி சார்ந்த ஆற்றலைப் பெருக்குவதற்கும் ஊரின் கல்வி வளர்ச்சியிலும் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் தொடர்ந்து தமது பங்களிப்பை செலுத்தி வருகின்றது.

ஏற்கனவே விக்கினேஸ்வரா மன்றம் 90 லட்சம் ரூபா செலவில் பாடசாலையின் பிரதான மண்டபத்தை அமைத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஊரின் அமைப்புக்களும் தமது ஊரின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தும் போது போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் துரித அபிவிருத்தியடையமும் என்பதில் ஜயமில்லை.

நல்லதோர் வீணை செய்தே அதை

நலங்கெடப் புழுதியில் எறிவருண்டோ சொல்லடி சிவசக்தி

 எனைச சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

 வல்லமை தாராயோ இந்த மானிலம் பயனுற வாழ்வதற்கே!

 -மகாகவி பாரதியார்-

Latest Offers