தமிழ் - முஸ்லிம் உறவுப் பாலம் மசூர் மௌலானா காலமானார்

வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவுப்பாலமாக இருந்தவரும், மருதமுனை மண்ணுக்கு மகுடம் சூட்டிய கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான செனட்டர் மசூர் மௌலானா(84) இன்று காலமானார்.

இவர் இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சிசெய்த பல அரசியல் தலைவர்களோடு மிகவும் நெருக்கமான உறவைப் பேணியவர். இன, மத வேறுபாடுகளின்றி அனைத்து இன மக்களுக்கும் சேவையாற்றியவர். இறுதியாக உயிருடன் இருந்த செனட்டர் இவர்தான்.தமிழ், முஸ்லிம்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் இரு இனத்தவர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பது இவரின் உயிர்மூச்சாக இருந்தது.

சமாதான காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் வன்னிக்குச் சென்ற மசூர் மௌலானா, அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு, நல்லிணக்கம் குறித்து பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேவேளை, தனது சொந்த இடமான மருதமுனையின் அபிவிருத்திக்கு அயராது பாடுபட்டார். நோயுற்று படுக்கையில் இருந்தபோதுகூட மருதமுனையின் அபிவிருத்தி பற்றி பேசிக்கொண்டிருந்தவர். மருதமுனையில் வீதிகள், மின்சாரம், விளையாட்டு மைதானம், வீட்டுத்திட்டங்கள், நூலகம், கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளுக்கும் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்.

இவர் தனது 17ஆவது வயதில் தந்தை செல்வநாயகத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியல் மேடைகளில் பிரசாரம் செய்தார். இவர் சிறந்த பேச்சாளராக விளங்கினார். வடக்கு, கிழக்கில் இவரின் மேடைப் பேச்சுகளைக் கேட்க பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரள்வர்.

1960ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு 119 வாக்குகளால் வெற்றிவாப்ப்பை இழந்தார்.

1966ஆம் ஆண்டு மருதமுனை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கரவாக வடக்கு கிராமசபையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். அன்று தொடக்கம் 1974ஆம் ஆண்டுவரை தலைவராகக் கடமையாற்றினார்.

அக்காலப் பகுதியில் அப்போதைய அரசின் அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் (1968 1969) இருளில் மூழ்கிக்கிடந்த மருதமுனை கிராமத்திற்கு மின்சாரத்தைக் கொண்டுவந்து ஒளியூட்டினார். அம்பாறை மாவட்டத்தில் முதலாவது தெருவிளக்கை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.


Latest Offers