ஜெயலலிதா இறந்த பின் எழுந்துள்ள சர்ச்சை - எரிப்பதா, புதைப்பதா..?

Report Print Murali Murali in சிறப்பு
665Shares

எரியூட்டுவதா, புதைப்பதா ? இறந்தவர்களின் உடலை அகற்ற இரு வழிகளுமே மனித நாகரீகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிகள் தான் என்றாலும், டிசம்பர் 5ம் தேதி காலமான, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல், அடக்கம் செய்யப்பட்டது இந்திய ஊடகங்ளில் ஒரு பேசு பொருளாகிவிட்டது.

பிராமண குலத்தில் பிறந்தவரான ஜெயலலிதாவை அவரது குல வழக்கப்படி தகனம் செய்திருக்கவேண்டும்; அடக்கம் செய்தது அந்த சமூகப் பழக்கத்தை மீறியதாகும் என்று இந்த ஆசாரங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் வாதிடுகின்றனர்.

``அவர் பிராமண ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், எரியூட்டப்படுவதுதான் சரி. ராஜாஜி ஐயங்கார் குலத்தைச் சேர்ந்தவர்; அவருக்கு எரியூட்டல்தான் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவை அடக்கம் செய்தது என்பது சற்று வழக்கத்துக்கு மாறுபட்டது என்றுதான் சொல்லவேண்டும்`` என்கிறார் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வைணவத் தத்துவத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் எம்.ஏ.வெங்கடகிருஷ்ணன்.

இதற்கு விதி விலக்குகள் உண்டு ஆனால் அவை ஜெயலலிதாவுக்குப் பொருந்தாது என்று கூறும் வெங்கடகிருஷ்ணன், பொதுவாக துறவிகள் , அவர்கள் காஞ்சிப் பெரியவர், அஹோபிலம் ஜீயர், வானமாமலை ஜீயர் போன்ற பிராமணத் துறவிகளாகவோ அல்லது மடாதிபதிகளாகவோ இருந்தாலும், அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் என்றார்.

துறவிகளுக்கான இறுதிச்சடங்கு விதிகள் எத்தி சம்ஸ்கார விதிகள் என்ற விதிகளில் கூறப்பட்டிருக்கின்றன என்கிறார் அவர்.

இந்து மதத்தை சேர்ந்த, பிராமணர்களைத் தவிர, இந்துக்களில், பிற சாதியினர் அனைவரும் இறந்தவர்களின் உடலுக்கு எரியூட்டுகிறார்களா என்பதிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

இந்த அடக்கம் செய்யும் முறையை சரியானது என்று வாதிடும் திராவிட கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி, எரியூட்டுவது என்பது ஒரு ``ஆரிய இந்து சநாதன முறை`` என்று கூறினார்.

ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருப்பதன் மூலம், ``இந்த சநாதன முறையையும் சேர்த்து புதைக்கப்பட்டிருக்கிறது. இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி’’ என்றார் வீரமணி.

தகன முறையைபிராமணர்கள் மட்டுமே பின்பற்றுகிறார்களா?

அது ``பண்பாட்டுப் படையெடுப்பின் ஆபத்து`` என்கிறார் வீரமணி. ``பேயை விட பேய் பிடித்தவன் அதிகமாக ஆடுவான்`` என்று மறைந்த குன்றக்குடி அடிகளாரை மேற்கோள் காட்டி, `பண்பாட்டுப் படையெடுப்பு என்ற பேய்`` மேல் சாதியினரையும் பீடித்திருக்கிறது என்றார் வீரமணி.

ஆனால் அடக்கம் செய்து, நினைவிடம் அமைப்பதன் மூலம் மறைந்த தலைவர்களை வழிபாட்டுக்குரியவர்களாக்கும், தனி மனித துதியை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியில் பகுத்தறிவுப் பாரம்பரியத்தில் வந்ததாகக் கூறிக்கொள்ளும் திராவிட இயக்க அரசுகள் ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டை வீரமணி மறுத்தார்.

இறுதி சடங்கில் திராவிட, ஆரிய வழக்கம் ?

திராவிட இயக்கங்கள் மீது வேறு எந்த குற்றச்சாட்டையும் வைக்க முடியாததால் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்படுவதாகக் கூறும் வீரமணி, உலகம் முழுவதும் தலைவர்களை அடக்கம்தான் செய்திருக்கிறார்கள். ``அங்கு என்ன பூகம்பம் வந்துவிட்டதா அல்லது தத்துவங்கள் மாறிவிட்டதா`` என்று கேட்கிறார் வீரமணி.

புதைப்பது திராவிட வழக்கம் , எரிப்பது ஆரிய வழக்கம் என்று தமிழர் பண்பாடு மற்றும் சமயம் தொடர்பாக பல நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர். தொ.பரமசிவன் போன்ற ஆய்வாளர்கள் வாதிடுகிறார்கள்.

ஆதிச்சநல்லூர் நாகரீகம் போன்றவை புதைக்கும் பழக்கம் கொண்ட நாகரீகங்கள்தான் என்று பரமசிவன் கூறுகிறார்.

இடுகாடு பற்றாக்குறை உண்டாகுமா?

ஆனால் புதைக்கும் வழக்கம் பரவலாக இருந்தால், தமிழ்நாட்டில் இடுகாடுகள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் என்று வெங்கடகிருஷ்ணன் கூறுகிறார்.

பெரும்பாலான இந்துக்கள் இறந்த பின் எரியூட்டும் பழக்கம்தான் பெரும்பான்மையாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

இதே கருத்தை எதிரொலிக்கும் தமிழ்நாடு பிராமண சங்கத் ( தாம்பிராஸ்) தலைவர் என்.நாராயணன், தமிழ் நாட்டில் வசிக்கும் பிராமணர்கள் இறந்தவர்களை எரிக்கும் பழக்கத்தைத்தான் வைத்திருக்கிறார்கள் என்கிறார்.

``இது இறந்தவர்களின் உடல் பஸ்பமாகி மண்ணோடு மண்ணாக வேண்டும் என்பதற்காக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இடப் பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதையும் மனதில் கொண்டுதான் இப்பழக்கத்தை முன்னோர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்`` என்றார் நாராயணன்.

தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இந்துக்கள் இறந்தவர்களின் உடலுக்கு தீயூட்டுவதே வழக்கம் என்று கூறும் நாராயணன், ஜெயலலிதா விஷயத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டது சம்பிரதாயத்துக்கு முரணானது என்று அவர் கூறுகிறார்.

ஆனால் தமிழ்நாட்டில் சமூக அளவில், எது பெரும்பான்மை பழக்கமாக இருந்தாலும், தற்கால அரசியல் வழக்கம் என்பது, வட இந்தியாவில் அரசியல் தலைவர்கள் இறந்தவுடன் தகனம் செய்யும் வழக்கத்துடன் மாறுபட்டதாகவே இருக்கிறது.

இறுதி சடங்கில் வட இந்திய பாணி எது?

வட இந்தியாவில் தகனத்துக்குப் பிறகு சேகரிக்கப்படும் அஸ்தி தான் நினைவிடங்களில் வைக்கப்படுகிறது. ராஜிவ் காந்தி, போன்றவர்கள் இறந்த பின் அவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு, அவர்கள் அஸ்திதான் நினவிடங்களில் வைக்கப்பட்டது.

ஆனால் வட இந்தியாவில் புதைப்பதை இஸ்லாமிய கலாசாரமாகப் பார்க்கும் ஒரு போக்கு இருப்பதாகக் கூறும் `தாம்பிராஸ்` தலைவர் நாராயணன், தமிழ்நாட்டில் புதைப்பதை சகித்துக்கொள்ளும் தன்மை இருக்கிறது என்கிறார்.

மேலும், ஜெயலலிதா விஷயத்தில், அவர் திராவிடப் பாரம்பரியத்தில் வந்த தலைவர் என்பதால், அதே பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்வது என்பது தொடர்ந்திருக்கிறது என்று நாராயணன் கூறுகிறார்.

அரசியல் ரீதியாக வடக்கிலிருந்து கடந்த 50 ஆண்டுகளாக பிரிந்தே தனிப்பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழக அரசியல் கலாசாரம், இந்த இறந்த தலைவர்களின் இறுதிச் சடங்கு விஷயத்திலும் தனித்தே காணப்படுகிறது.

- BBC - Tamil

Comments